பயிர்களுக்கு தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள்:அழிந்து வரும் பறவை இனங்கள்...மனித குலத்துக்கு ஆபத்தா? பல்வேறு தரப்பினர் கருத்து
பயிர்களுக்கு தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் அழிந்து வரும் பறவை இனங்கள்...மனித குலத்துக்கு ஆபத்தா? என்பது குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தொிவித்துள்ளனா்.;
அதோ அந்த பறவைபோல வாழவேண்டும் என்று ஆனந்த வாழ்வுக்கு உதாரணமாக கவிஞர்கள் பாடிய பறவை இனங்கள் இப்போது வாழ்கின்றனவா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. "காக்கை கரையும்", "வானம்பாடி பாடும்", "மயில் அகவும்", "குயில் கூவும்" என்று 30 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். அப்போது கிராமங்களில் காக்கைகள் கரைந்ததையும், வானம்பாடி பாடியதையும், கண்கூட கிராமத்து மக்கள் பார்த்தனர்.
இனிமேல் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் சொல்லி கொடுக்கும் போது ஒரு காலத்தில் "காக்கைகள் கரைந்தன" "வானம்பாடிகள் பாடின" "குயில் கூவியது" என்று சொல்லும் அளவுக்கு பறவைகள் அழிவை நோக்கி சென்றுவிட்டன.
காக்கைகளை காணோம்
கிராமப்புறங்களில் உள்ள மின்கம்பிகளில் கூட்டம், கூட்டமாக காக்கைகள் அமர்ந்து கொண்டு "கா...கா" என கத்திக்கொண்டு இருக்கும். இப்படி கத்தினால் துக்க செய்தி வரும் என்று காக்கைகளை விரட்டுவார்கள். ஒரு காக்கை மட்டும் வீட்டு தின்னையில் வந்து அமர்ந்து கரைந்தால் யாரோ உறவினர்கள் வருவார்கள் என்று மகிழ்ந்தனர்.
ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இறந்தவர்களுக்கு சடங்கு செய்யும்போது காக்கைகளுக்கு உணவு வைப்பது வழக்கம். இப்போது எல்லாம் அந்த உணவை எடுப்பதற்கு கூட காக்கைகள் வருவதில்லை. கண்களுக்கு சிக்குவதில்லை. கிராமங்களில் உள்ளவர்கள் கூட அமாவாசையன்று காக்கைகளுக்கு உணவு வைக்க வழியில்லாமல் பசுமாடுகளுக்கு கொடுத்து விரதத்தை முடித்து கொள்கின்றனர்.
பறவைகள் தற்போது எதனால் காணாமல் போய்விட்டன. அவைகள் ஏன் அழிந்து வருகின்றன? என்பது குறித்தும், இதற்கு என்ன தீர்வு? என்பது பற்றியும் பல்வேறு தரப்பினர் கூறிய கருத்துகளை காண்போம்.
பூச்சிக்கொல்லி மருந்து
சென்னிமலை சொக்கநாதபாளையத்தை சேர்ந்த விவசாயி எஸ்.பி.தங்கவேல்:-
தென்னை, வாழை, நெல், பப்பாளி இப்படி எதை பயிரிட்டாலும் தற்போது அதில் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாகி விட்டது. அதனால் விவசாயிகள் தங்களுக்கு லாபம் கிடைக்கிறதோ இல்லையோ நஷ்டம் ஏற்படாமல் இருக்க பயிர்களை காப்பாற்ற பூச்சி மருந்தை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். களை பறிக்க ஆட்கள் இல்லை என்பதால் அதற்கும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது.
இப்படி வயல், வரப்பு என அனைத்து இடங்களிலும் ரசாயன மருந்தை பயன்படுத்துவதால் அதில் பூச்சிகள் மட்டும் அழிவதில்லை. அந்த தானியங்களை இரையாக உண்ணும் பல வகையான பறவைகளும் அழிகின்றன. கிராமப்புறங்களில் தான் பறவைகள் அதிகமாக இருக்கும். ஆனால் அங்கு அனைத்து பயிர்களிலும் பூச்சி மருந்து தெளிப்பதால் காக்கைகள், சிட்டுக்குருவிகள் போன்ற பல்வேறு பறவையினங்களின் இனப்பெருக்கம் குறைந்துவிட்டது. அதேபோல் விவசாயிகளுக்கு உற்ற தோழன் எனப்படும் மண்புழுக்கள் அறவே இல்லை. ஏனென்றால் தற்போது கால்நடைகள் வளர்ப்பதை பெரும்பாலானோர் கைவிட்டு விட்டனர். இதன் மூலம் இயற்கையாக கிடைத்த சாணங்களை பயிர்களுக்கும், வாழைகளுக்கும் யாரும் உரமாக இடுவதில்லை. இதனால் மண் புழுக்களும் அதிக அளவில் அழிந்துவிட்டன. இதெல்லாம் மனிதர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை.
குறையும் மகரந்த சேர்க்கை
சென்னிமலை எக்கட்டாம்பாளையம் மேட்டூரை சேர்ந்த தனியார் நிறுவன அலுவலர் எம்.முத்துக்குமார்:-
பூச்சிக்கொல்லி மருந்து இல்லாமல் விவசாய பயிர்களை வளர்ப்பது எப்படி என்றெல்லாம் யாரும் கண்டுபிடிப்பது இல்லை. ஆனால் சுலபமாக எளிய முறையில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்காக ஆளில்லா விமானம் போல் "டிரோன்" போன்ற எந்திரங்கள் வந்துவிட்டன. இது போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால் விவசாய பயிர்கள் மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கே பாதிப்பு ஏற்படும். காக்கைகள், சிட்டுக்குருவிகள், மரங்கொத்தி பறவைகள் இப்படி பல வகையான பறவை இனங்கள் பூச்சிக்கொல்லி மருந்து தாக்குதலால் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் அழிந்து வருகின்றன. செடி, கொடிகளில் மகரந்த சேர்க்கைக்கு வரும் தேனீக்களும் குறைந்துவிட்டன. இனி வரும் காலங்களை நினைத்தால் கவலையாக உள்ளது. அதனால் மனிதர்களுக்கும், இயற்கைக்கும் ஆபத்து இல்லாத வகையில் பயிர்களைக் காக்க வேளாண் விஞ்ஞானிகள் புது யுக்திகளை கண்டுபிடிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு நஷ்டம்
சென்னிமலையை சேர்ந்த த.தமிழ்ச்செல்வி:-
முன்பெல்லாம் கிராமப்புறங்களில் ராகி, கம்பு, சோளம் இப்படி தானிய பயிர்கள் அதிக அளவில் பயிரிடுவார்கள். அப்போது பூச்சிகள் பரவலாக சென்றதால் பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தாமல் இருந்தனர். தற்போது போதிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் தற்போது குறைந்த அளவிலேயே தானியங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்த பயிர்களை தேடி சென்று அதிக அளவில் பூச்சிகள் தாக்குவதால் விவசாயிகள் வேறு வழியின்றி பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்துகின்றனர். இதனால் உணவு தேடி வரும் பறவை இனங்களும் அழிந்து வருகின்றன.
பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்ட தானிய வகைகளை உண்ணும் நமக்கும் பெரும் ஆபத்து உள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இந்த விலை விவசாயிகளுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தும். முதலில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் போதுமான விலை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்த முன் வர மாட்டார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பறவைகள் வாழ முடியாத பூமியில் மனிதன் மட்டுமல்ல எந்த ஜீவராசியும் வாழ முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.