துடுப்பு போன்ற அலகு அமைந்த பறவை

கரண்டி வாயன், துடுப்பு வாயன் என்று தமிழில் சொல்லப்படும் பறவையினம், ஆங்கிலத்தில் ‘Spoonbill’ என்று அழைக்கப்படுகிறது.

Update: 2023-02-07 16:19 GMT

பெரிய பறவை இனத்தைச் சேர்ந்த இந்த கரண்டி வாயன் பறவை இனத்தில், 'கரண்டிவாயன்', 'கருமூஞ்சி கரண்டிவாயன்', 'ஆப்பிரிக்க கரண்டிவாயன்', 'அரச கரண்டிவாயன்', 'மஞ்சள் அலகு கரண்டிவாயன்', 'இளஞ்சிவப்பு கரண்டிவாயன்' என்று 6 சிற்றினங்கள் இருக்கின்றன. இவற்றில் தெற்கு மற்றும் வட அமெரிக்கப் பகுதிகளில் வாழும் இளஞ்சிவப்பு கரண்டிவாயன் (Roseate Spoonbill) பற்றி இங்கே பார்க்கலாம்.

அனைத்து கரண்டிவாயன் பறவைகளும் வெள்ளை நிறத்தில் இருக்கையில், அதன் ஒரு பிரிவான இந்தப் பறவை மட்டும் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இந்தப் பறவை சாப்பிடும் உணவில் இருந்து பெறப்படும், கரோட்டினாய்டு நிறமி கொண்ட காந்தாக்ஸாந்தின், அஸ்டாக்ஸாந்தின் போன்றவையே இதன் இளஞ்சிவப்பு நிறத்திற்கு காரணம். இந்தப் பறவை 70 செ.மீ. முதல் 120 செ.மீ. நீளம் வரை வளரும் தன்மை கொண்டது. இதன் உடல் எடை 1½ கிலோ முதல் 2 கிலோ வரை இருக்கும். இதன் பாதங்கள் 9 செ.மீ. முதல் 13 செ.மீ. நீளமும், துடுப்பு போன்ற அலகு 14 செ.மீ. முதல் 18 செ.மீ. நீளமும் கொண்டவை. இந்த இளஞ்சிவப்பு கரண்டிவாயன் பறவையின் இறக்கைகளும் மிகவும் நீளமானவை. இந்த இறக்கையானது சுமார் 32 செ.மீ. முதல் 37 செ.மீ. வரை இருக்கும்.

கூட்டமாக வாழும் தன்மை கொண்ட இந்தப் பறவை, தன்னுடைய வளைந்த பெரிய கழுத்தை, நேராக நீட்டியபடிதான் பறக்கும். இந்தப் பறவை இனம் 18 மற்றும் 19-ம் ஆண்டுகளில் நடந்த வேட்டையின் காரணமாக அழியும் நிலைக்குச் சென்றது. ஆனால் பல பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, தற்போது மீண்டும் இதன் இனப்பெருக்கம் அதிகரித்து வருகிறது. இந்தப் பறவைகள் ஆழமற்ற நீர்நிலைகள், கடலோர பகுதிகளில் தங்களுக்கான இரையைத் தேடுகின்றன. நன்னீர், உவர்நீர் இரண்டிலுமே வாழும் தன்மை கொண்டது இந்தப் பறவை என்றாலும், நன்னீர் நிலைகளையே அதிகம் விரும்புகின்றன.

நீரில் உள்ள சிறிய பூச்சிகள், சிறுசிறு மீன்கள், தவளைகள் போன்றவற்றை உணவாகச் சாப்பிடும் இந்தப் பறவை, நீர்நிலைகளின் ஓரங்களில் இருக்கும் மரங்களில் தங்களுக்கான கூடுகளை அமைத்துக் கொள்கின்றன. இனப்பெருக்க காலத்தில் பெண் பறவைகள் மூன்று முட்டைகள் வரை இடும். அதனை ஆண், பெண் இரண்டு பறவைகளுமே அடைகாக்கும். முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகளுக்கு, சில நாட்கள் பார்வை திறன் இருக்காது. மேலும் பிறக்கும் குஞ்சுகளின் அலகானது, இளமைக் காலம் வரை கூர்மையாகவே இருக்கும். அது வளர்ந்து பருவடையும் நேரத்தில்தான், அலகில் மாற்றம் ஏற்பட்டு அவை துடுப்பு போன்ற வடிவத்தைப் பெறுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்