நீண்ட ஆயுளுக்கான ரகசியங்கள்
நீண்ட காலம் வாழ்பவர்கள் இயற்கையுடன் நெருக்கமான தொடர்பை கொண்டிருக்கிறார்கள். இயற்கையான சூழலில் வசிப்பவதற்கு விரும்புவார்கள்.;
உலகின் பல்வேறு பகுதிகளில் நீண்ட ஆயுளுடன் வாழ்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களின் ஆயுள் ரகசியம் குறித்து அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆராய்ச்சியாளர் டான் ப்யூட்னர் ஆய்வு செய்தார். ஜப்பானில் உள்ள ஒகினாவா தீவு, கிரீஸில் உள்ள இகாரியா தீவு, கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா நகரம், கோஸ்டாரிகாவில் உள்ள நிக்கோயன் தீபகற்பம், இத்தாலியில் உள்ள சர்டினியா நகரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் மருத்துவர்கள், மானுடவியலாளர்கள், தொற்றுநோயியல் நிபுணர்கள் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இறுதியில் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு அவர்கள் பின்பற்றும் பொதுவான விஷயங்கள் கண்டறியப்பட்டது.
நீண்ட காலம் வாழ்பவர்கள் இயற்கையுடன் நெருக்கமான தொடர்பை கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் இயற்கையோடு இணைந்திருக்கும். இயற்கையான சூழலில் வசிப்பவதற்கு விரும்புவார்கள். அங்குதான் வசிக்கவும் செய்வார்கள்.
நீண்ட காலம் வாழ்பவர்கள் தங்கள் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறார்கள். தான் எதற்காக வாழ்கிறோம் என்பதை தீர்மானித்து அதன்படி செயல்படுகிறார்கள்.
மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் வழக்கத்தை தவறாமல் பின்பற்றுகிறார்கள். எந்தவொரு சூழலிலும் மன அழுத்தத்தை எதிர்கொள்ள நேர்ந்தால் சிறிது நேரத்திற்குள்ளாகவே அதில் இருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு தங்களை பழக்கப்படுத்திக்கொள்கிறார்கள்.
நீண்ட ஆயுளுடன் வாழ்பவர்கள் அளவோடு சாப்பிடுவார்கள். காலை, மதியம், இரவு உணவை சரியான நேரத்திற்குள் சாப்பிடும் வழக்கத்தையும் பின்பற்றுவார்கள்.
நீண்ட காலம் வாழ்பவர்கள் பருப்பு, தானிய வகைகளை அதிகம் சாப்பிடுகிறார்கள். உண்ணும் உணவுகளில் 95 சதவீத கலோரிகள் தாவர பொருட்களில் இருந்தும், 5 சதவீதம் விலங்கு பொருட்களில் இருந்தும் கிடைக்குமாறு பார்த்துக்கொள்வார்கள்.
மது, புகைப் பழக்கத்தை தவிர்க்கவும் செய்வார்கள்.
உலகில் மிக நீண்ட காலம் வாழும் மக்களிடையே காணப்படும் பொதுவான விஷயங்களில் ஒன்று உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது. நெருக்கமான உறவுகளுடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவார்கள். உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்.
நீண்ட காலம் வாழும் மக்கள் குடும்பத்திற்கு முதலிடம் கொடுக்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள்.