கந்தர்வகோட்டையில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள கல்லூரி, பள்ளிகளில் அப்பகுதி மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு காலையில் செல்லும் நேரத்திலும், மாலையில் வீட்டிற்கு செல்லும் போதும் கந்தர்வகோட்டையில் உள்ள அனைத்து வழித்தடங்களுக்கும் போதிய பஸ்கள் இல்லாத காரணத்தால் மாணவ-மாணவிகள் இரவு 7 மணி வரை பஸ் நிலையத்திலேயே நிற்க வேண்டிய அவல நிலை உள்ளது.இதை கண்டித்து இந்த வழித்தடங்களில் அதிகமான பஸ்களை இயக்க வேண்டும் என்று கூறி கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி-கல்லூரி மாணவர்கள், மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்களிடம் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில், மாணவர் சங்கத்தினர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையிலும், செங்கிப்பட்டி-கந்தர்வகோட்டை நெடுஞ்சாலையிலும் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.