சூலூர்
கோவையை அடுத்த சூலூர் பகுதியில் புகையிலை, கஞ்சா, போதை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சூலூரை அடுத்த பாப்பம்பட்டி பிரிவு அருகே குட்கா புகையிலை பொருட்களை விற்ப னைக்காக பதுக்கி கடத்தி செல்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப் - இன்ஸ்பெக்டர் குப்புராஜ் தலைமையில் போலீசார் விரைந்து சென்று அங்கு தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி மூட்டை, மூட்டையாக இருப்பது தெரிய வந்தது.
உடனே அந்த காரில் குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி கடத்தி வந்த குரும்பபாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது39), சவுரிபாளையத்தை சேர்ந்த சுதாகரன் (42), இருகூரை சேர்ந்த செல்வகுமார் (45), செலக்கரசலை சேர்ந்த குருநாதன் (49) ஆகிய 4 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1½ டன் குட்கா, புகையிலை பொருட்கள், கார் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.