மலட்டாற்றின் குறுக்கே ரூ.10 கோடியில் உயர்மட்ட பாலங்கள்
கண்டமங்கலம் ஒன்றியத்தில் மலட்டாற்றின் குறுக்கே ரூ.10 கோடியில் உயர்மட்ட பாலங்கள்;
விழுப்புரம்:
கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நபார்டு நிதிஉதவி திட்டத்தின் கீழ் வடவாம்பலம்- ஜெகநாதபுரம் சாலை மலட்டாற்றின் குறுக்கே ரூ.3.39 கோடி மதிப்பிலும், ரங்காரெட்டிப்பாளையம் சாலை மலட்டாற்றின் குறுக்கே ரூ.6.65 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூ.10.4 கோடி மதிப்பில் 2 உயர்மட்ட பாலங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், புகழேந்தி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு 2 உயர்மட்ட பாலங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்-அமைச்சர், நகர பகுதிகளை போன்றே கிராமப்புறங்களிலும் சாலை வசதி மற்றும் உயர்மட்ட பாலங்கள் அமைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். அதன் மூலம் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் பொருட்களை எளிதில் எடுத்துச்சென்று சந்தைப்படுத்தலாம். முக்கியமாக மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளநீர், கிராமப்பகுதிகளில் சூழாமல் உயர்மட்ட பாலத்தின் வழியாக சென்று உரிய ஏரிகள் மற்றும் குளங்களுக்கு சென்று நீர் ஆதாரம் சேமிக்கப்படும். அதனடிப்படையில் தற்போது 2 உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார். இவ்விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் வெண்ணிலா, கண்டமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் வாசன், துணைத் தலைவர் நசீராபேகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம், சிவக்குமார், கண்டமங்கலம் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பிரபாகரன், செல்வமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.