10 கி.மீ. தொலைவு பயணத்துக்கு பஸ்களில் ரூ.7-க்கு மேல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்

10 கி.மீ. தொலைவு பயணத்துக்கு பஸ்களில் ரூ.7-க்கு மேல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என்று நீதிபதி கூறியுள்ளார்.

Update: 2023-10-14 21:53 GMT

திருச்சி துறையூர் பகளவாடியை சேர்ந்தவர் குருநாதன். இவர் கடந்த ஜூலை மாதம் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் அளித்த மனுவில், 10 கி.மீ.க்குட்பட்ட தொலைவுக்கான பஸ் பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.5.80 மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆனால் பகளவாடி-துறையூருக்கு இடையே 10 கி.மீ. பயணத்துக்கு அரசு மற்றும் தனியார் பஸ்களில் ரூ.7 முதல் ரூ.10 வரை வசூலிக்கப்படுகிறது. இது சட்டத்துக்கு புறம்பானது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்குரிய பதிலளிக்க, அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் பொதுமேலாளர், பெரியமிளகுபாறை அலுவலக மண்டல மேலாளர், ஸ்ரீரங்கம், துறையூர் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் திருச்சி கலெக்டர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது கலெக்டர் தவிர, மற்றவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அரசு பஸ்களில் காப்பீடு மற்றும் சுங்கக்கட்டணம் சேர்த்து ரூ.7 வசூல் செய்யப்படுவதாகவும், தனியார் பஸ்களில் ரூ.10 வசூல் செய்வது குறித்து பலமுறை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இனி இதுபோன்று நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். புகார்தாரர் இதை ஏற்று கொண்டதையடுத்து, வழக்கு சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெற்றால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம் என நீதிபதி ஜெய்சிங் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்