இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
ஆவணப்படமாகும் அஜித்தின் கார் ரேஸ் பயணம் - ஏ.எல்.விஜய் இயக்குகிறாரா?
அஜித்குமார், தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்துகொண்டிருக்கிறார். இதற்கிடையில் அஜித்தின் கார் ரேஸ் பயணம் ஆவணப்படமாக உருவாகிறது. இந்த ஆவணப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
செகந்திராபாத் - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில்
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.
இண்டிகோ விமான சேவை ரத்து: தொலைதூர ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் வசதிக்காக தொலைதூர ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஏலவார்க்குழலி அம்மன் கோவிலுக்கு ஏகாம்பரநாதர் இறை பணி அறக்கட்டளை சார்பில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்கத் தேர் செய்து முடிக்கப்பட்டு உள்ளது. இதன் வெள்ளோட்டம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி ஓரிக்கை மகா பெரியவர் மணி மண்டப வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள தங்கத்தேருக்கு நேற்று சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது.
இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு தங்கத்தேர் வெள்ளோட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
அம்பேத்கர் எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும் ஓர் அமைப்புக்குள் இருந்து, கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர். அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்கக் கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிக்கிறதே, அதுதான் அவரது வெற்றி.
அவரது வாழ்வே ஒரு பாடம்! அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம்! அண்ணல் அம்பேத்கர் எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.199-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இம்மாத இறுதியில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு... நல்ல மழையை கொடுக்கும் என கணிப்பு
15-ந் தேதிக்கு பின் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி டெல்டா, தென்மாவட்டங்களிலும், 20-ந்தேதி அடுத்த தாழ்வுப்பகுதி உருவாகி சென்னை-கன்னியாகுமரி வரையிலான கடலோரப் பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்பை கொடுக்கும். இதனையடுத்து வடகிழக்கு பருவமழை காலத்தின் 3-வது புயல் சின்னம் தெற்கு வங்கக்கடலில் 23-ந்தேதிக்கு பிறகு உருவாவதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது என்று தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.