கிணத்துக்கடவு தாலுகாவில் ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா

கிணத்துக்கடவு தாலுகாவில் ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update:2023-04-12 00:15 IST

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு தாலுகாவில் ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பரவல் அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கிணத்துக்கடவு தாலுகாவில் நல்லடிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காய்ச்சல் அதிகம் உள்ள பகுதியில் மருத்துவ பரிசோதனை மற்றும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூலக்கல் பகுதியில் உள்ள தனியார் இரும்பு கம்பி உற்பத்தி தொழிற்சாலையில் பணிபுரியும் 53 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் முடிவு வெளியானதில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து கோவை மாவட்ட தொற்றுநோய் நிபுணர் டாக்டர்.மோவபியா, நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா, சுகாதார மேற்பார்வையாளர் ராஜவேலு, சுகாதார ஆய்வாளர்கள் குணசேகரன், கவுதம், செல்வம் மற்றும் சூலக்கல் ஊராட்சி நிர்வாகத்தினர், தூய்மை பணியாளர்கள் தனியார் தொழிற்சாலைக்கு வந்து தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

10 பேருக்கு கொரோனா

பின்னர் கொரோனா பாதித்த 6 பேரையும் அந்த தொழிற்சாலையில் உள்ள தனி அறையில் தனிமைப்படுத்தினர். மேலும் தொழிற்சாலை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.

இதேபோல கிணத்துக்கடவு, வரதனூர், செங்குட்டுபாளையம், சோழனூர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

முகக்கவசம் கட்டாயம்

இதுகுறித்து வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சித்ரா கூறியதாவது:-

கிணத்துக்கடவு தாலுகாவில் ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தனியார் தொழிற்சாலையில் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், தொழிற்சாலைக்கு பணிக்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவும், அடிக்கடி கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்யவும், பணிக்கு வருபவர்களுக்கு தினசரி உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொற்று ஏற்பட்ட கிராம பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தி பொதுமக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்