உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
தமிழகத்தின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழ்நாட்டில் இப்போது மக்கள் நலத்திட்டங்கள் அதிகமான அளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு புதிய புதிய திட்டங்களை அறிவித்து மக்களைக் கவர்ந்து வருகிறது. இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த அரசுக்கு அதிகம் செலவாகும். இதனால் தமிழகத்தின் கடன் சுமையும் அதிகரிக்கிறது. தமிழகத்தின் கடன் சுமை தற்போது 10 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது என்று காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
“அனைத்து மாநிலங்களிலும் தமிழகத்தில்தான் நிலுவையில் உள்ள கடன் தொகை மிக அதிகமாக உள்ளது. 2010-ல், உத்தரபிரதேசத்தின் கடன் தொகை தமிழகத்தின் கடனை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக இருந்தது. இப்போது, தமிழகத்தின் கடன் தொகை உத்தரபிரதேசத்தை விட அதிகமாக உள்ளது.
வட்டிச் சுமையின் சதவீதத்தில், பஞ்சாப் மற்றும் அரியானாவுக்கு அடுத்தப்படியாக தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் கடன்/மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், கொரோனா தொற்றுக்கு முந்தைய நிலைகளை விட இன்னும் மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.