பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில்தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறைவிழுப்புரம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2023-08-22 18:45 GMT


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் முனியன் மகன் அய்யனார் (வயது 30), தொழிலாளி. அதே கிராமத்தை சேர்ந்த 20 வயதுடைய பெண்ணிடம் கடந்த 9.4.2015 அன்று அய்யனாரின் பாட்டி சென்று தனது வீட்டில் புளியங்கொட்டை இருப்பதாகவும், அதை அள்ளிச்செல்லும்படியும் கூறியுள்ளார்.

அதன்படி அப்பெண், அங்கு புளியங்கொட்டையை அள்ளிக்கொண்டு வருவதற்காக சென்றார். அப்போது அங்கு தனியாக இருந்த அய்யனார், வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு அப்பெண்ணை பலாத்காரம் செய்தார். இதுபற்றி அப்பெண், அழுதுகொண்டே வந்து தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் தாய், இதுகுறித்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யனாரை கைது செய்தனர்.

தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மிஸ், குற்றம் சாட்டப்பட்ட அய்யனாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதால் அவரது தாய்க்கு இழப்பீடாக ரூ.2 லட்சத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட அய்யனார், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சங்கீதா ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்