அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1,000 - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

ஏழை மாணவிகள் உயர் கல்வி பயில வேண்டும் என்று நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.

Update: 2024-03-16 04:55 GMT

சென்னை,

அரசு பள்ளிகளை தொடர்ந்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை வரும் கல்வியாண்டில் செயல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. இதன்மூலம் வரும் கல்வி ஆண்டில் 49,664 பேர் பயன்பெறுவர்.

ஏழை மாணவிகள் உயர் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதில் முக்கியமான திட்டம் புதுமைப்பெண் திட்டம். இந்த திட்டம் என்னவென்றால் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து, தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்று பின் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுவார்கள்.

இந்நிலையில், இந்த திட்டம் வரும் கல்வியாண்டு முதல், அரசு பள்ளிகளை தொடர்ந்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் சமூகநலத் துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் (புதுமைப் பெண் திட்டம்) வரும் கல்வி ஆண்டில் (2024-2025) அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் நீட்டிக்கப்படும். அத்திட்டத்துக்கு ரூ.370 கோடி ஒதுக்கப்படும் என்று பட்ஜெட் உரையின்போது நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அறிவித்தார். இதையடுத்து இத்திட்டம் தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்