ரூ.118 கோடியில் நலத்திட்ட உதவிகள்

பழனி அருகே நடந்த விழாவில், 11 ஆயிரத்து 816 பயனாளிகளுக்கு ரூ.118 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்.

Update: 2023-10-26 20:45 GMT

 ரூ.118 கோடி நலத்திட்ட உதவிகள்

தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில், பழனி அருகே தொப்பம்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பின்னர் அவர் வருவாய்த்துறை, வேளாண் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை என பல்வேறு துறைகள் சார்பில் 11 ஆயிரத்து 816 பயனாளிகளுக்கு ரூ.117 கோடியே 85 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

முன்மாதிரி மாநிலமாக...

விழாவில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:-

மகளிர் மேம்பாட்டுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியதன் காரணமாக, பிறமாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது. இதேபோல் மாணவ-மாணவிகள் நலனிலும் தமிழக அரசு முழு அக்கறை கொண்டு திட்டங்களை தீட்டி வருகிறது.

தி.மு.க. ஆட்சி பெறுப்பேற்ற 2 ஆண்டுகளில் 16 லட்சம் ரேஷன்அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் 1,500 ரேஷன்கடைகள் பிரிக்கப்பட்டு முழுநேரம் மற்றும் பகுதிநேர கடைகளாக மாற்றப்பட்டு உள்ளன.

2 ஆண்டுகளில் நிறைவேற்றம்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி மாணவிகள் பயன்பெறுவதற்காக விடுதி, கருத்தரங்கம் வசதிகளுடன் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. விவசாயிகளின் விளைபொருட்களை சேமித்து வைப்பதற்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.5 கோடியில் கட்டப்பட்ட குளிர்சாதன கிடங்கு விரைவில் திறக்கப்பட உள்ளது. தமிழகத்தில் ரூ.4 ஆயிரம் கோடியில் சாலை சீரமைப்பு பணி நடந்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாத திட்டங்கள், வெறும் 2 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்படாத திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்துகொண்டவர்கள்

விழாவில் பழனி ஆர்.டி.ஓ. சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் காந்திநாதன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ராமகிருஷ்ணன், திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ராஜாமணி, தொப்பம்பட்டி ஒன்றியக்குழு தலைவர் சத்தியபுவனா, துணைத்தலைவர்.பி.சி.தங்கம், ஒட்டன்சத்திரம் ஒன்றியக்குழு தலைவர் அய்யம்மாள், தொப்பம்பட்டி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் சுப்பிரமணி (மேற்கு), தங்கராஜ் (கிழக்கு), மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணசாமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், தொப்பம்பட்டி ஊராட்சித் தலைவர் ஈஸ்வரி ராமராஜ், துணைத்தலைவர் பெரியசாமி, ஒன்றிய கவுன்சிலர் மோகன்குமார், மரிச்சிலம்பு ஊராட்சி தலைவர் சுப்பிரமணி, தும்பலபட்டி ஊராட்சி தலைவர் வசந்தி கதிரேசன் துணைத் தலைவர் நதீஸ்வரி சேகர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், தி.மு.க.வினர் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்