பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து 12 பயணிகள் காயம்

பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து 12 பயணிகள் காயமடைந்தனர்.;

Update:2023-04-28 02:10 IST

குன்னம்:

கண்ணாடியை சரிசெய்த டிரைவர்

பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து குளத்தூர் கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்று மதியம் அந்த பஸ் பெரம்பலூரில் இருந்து குளத்தூருக்கு புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சை டிரைவர் நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்த காளமேகம்(வயது 59) ஓட்டினார். கண்டக்டராக பெரம்பலூரை சேர்ந்த ராஜா (40) பணியில் இருந்தார். அந்த பஸ்சில் சுமார் 40 பேர் பயணம் செய்தனர்.

இந்நிலையில் சிறுவாச்சூர்-அரியலூர் சாலையில் சாத்தனூர் குடிக்காடு சங்கிலி கருப்பையா கோவில் அருகே சென்றபோது டிரைவர் காளமேகம் பஸ்சை ஓட்டிக்கொண்டே, பஸ்சின் வலதுபக்க பக்கவாட்டு கண்ணாடியை சரி செய்தார். அப்போது அவர் இருக்கையில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

12 பயணிகள் காயம்

இதனால் டிரைவரின் கட்டுப்பாடின்றி சிறிது தூரம் சென்ற அந்த பஸ் சாலையோர பள்ளத்தில் சாய்ந்து கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அய்யோ... அம்மா... காப்பாற்றுங்கள் என்று அலறினர். மேலும் இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த செல்வராஜ்(60), முத்துசாமி (63), அமராவதி (75), லட்சுமி (28), சுசிலா (55), ராஜேஸ்வரி (46), பச்சையம்மாள் (70), ஆறுமுகம் (60), அலமேலு (55), சம்பூர்ணம் (52), ராமாயி (65), செல்லம்மாள் (60) ஆகிய 12 பேர் காயமடைந்தனர்.

அவர்களை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விபத்து குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்