தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்..? - டிடிவி தினகரன் பதில்

மத்திய மந்திரி பியூஷ் கோயலை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் மீண்டும் இணைந்தார்.;

Update:2026-01-21 12:53 IST

கோப்புப்படம்

சென்னை,

தமிழக சட்டசபைக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவும், எதிர்க்கட்சியான அதிமுக ஆட்சியை பிடிக்கவும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றன. இந்த சூழலில், அதிமுக - பாஜக கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் 23-ந்தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேச இருக்கிறார்கள். எனவே கூட்டணியை இறுதிப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

தற்போது வரை அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக (அன்புமணி), தமாக, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் தேமுதிக, அமமுகவை சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் அதிமுக - பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அதிரடியாக அறிவித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அவர் வெளியேறிய நிலையில் மீண்டும் இணைவதாக தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பாஜக மேலிட பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஸ்கோயல், மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரை நேரில் சந்தித்த டிடிவி தினகரன், தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்து கொண்டார். பியூஷ் கோயல் உள்ளிட்டோருடன் டிடிவி தினகரன் புகைப்படம் எடுத்துக்கொண்டு கையை உயர்த்தி கூட்டணியை உறுதி செய்தார்.

இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பேசியதாவது:-

நாங்கள் எங்களது பங்காளி சண்டை எல்லாம் ஓரமாக வைத்துவிட்டு, எல்லாவற்றையும் மறந்துவிட்டு, எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக முழு மனதோடு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளோம்.

‘இன்னா செய்தாரை ஒறுத்தல்’ என்ற வள்ளுவரின் வாக்குப்படி கூட்டணியை முடிவு செய்துள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். கூட்டணி ஆட்சியில் அமமுக பங்கேற்கும். தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்த அமமுக உறுதுணையாக இருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்காக அமமுக தொண்டர்கள் கடுமையாக உழைத்திடுவார்கள். 2021ஆம் ஆண்டு அமைக்கத் தவறிய மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியை இம்முறை அமைத்தே தீருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்..? என்ற கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், “அது அனைவருக்கும் நன்றாக தெரியும்” என்று பதில் அளித்தார்.

தே.ஜ. கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடாமல் முதல்-அமைச்சர் வேட்பாளர் குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்