தமிழக மீனவர்கள் கைது: தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.;

Update:2026-01-21 13:26 IST

கோப்புப்படம் 

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் இன்று (21-01-2026) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும், இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு இன்று (21-01-2026) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், இரண்டு மீன்பிடிப் படகுகளில் வழக்கமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் இன்று (21.01.2026) சிறைபிடிக்கப்பட்டுள்ள மற்றொரு சம்பவத்தை மத்திய வெளியுறவுத்துறை மந்திரியின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீண்டும், மீண்டும் இதுபோன்று கைது செய்யப்படுவதும், அவர்களின் மீன்பிடிப் படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுவதும் தடையின்றித் தொடர்வது மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், இன்றுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 254 மீன்பிடிப் படகுகளும், தற்போதைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட 90 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளதாகக் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

தொடர்ச்சியாக நிகழும் இத்தகைய கைது நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமூகத்தினருக்குக் கடுமையான இன்னல்களை ஏற்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள முதல்-அமைச்சர், தமிழக மீனவர்கள் இலங்கையில் நீண்ட காலம் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், அவர்களது குடும்பத்தினருக்கு கடுமையான பொருளாதார நெருக்கடியினையும் தொடர்ச்சியான மன உளைச்சலையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், இத்தகைய சம்பவங்கள், கடலோரப் பகுதிகளின் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை ஆழமாகச் சீர்குலைத்துள்ளது என்றும் தனது கடிதத்தில் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.

எனவே, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அரசு உடனடியாக விடுவித்திடவும், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதைத் தடுக்கவும். மத்திய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்