வால்பாறையில் ஒன்றிய அளவிலான செஸ் போட்டியில் 18 மாணவர்கள் வெற்றி
வால்பாறையில் ஒன்றிய அளவிலான செஸ் போட்டியில் 18 மாணவர்கள் வெற்றி பெற்றனர்.;
வால்பாறை
வால்பாறை பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளி, அரசு உயர் நிலைப் பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 120 மாணவ மாணவிகளுக்கு 44-வது உலக செஸ் போட்டியில் பங்கு பெற தகுதி பெறுவதற்கான ஒன்றிய அளவிலான செஸ் போட்டி வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஏற்கனவே வட்டார அளவில் அந்தந்த பள்ளிக்கூடங்களில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற 120 மாணவ மாணவிகள் நேற்று நடைபெற்ற ஒன்றிய அளவிலான போட்டியில் பங்கேற்றனர். வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமை தாங்கினார். இந்த போட்டிக்கு வட்டார கல்வி அலுவலர் பன்னீர்செல்வம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராபின்சன் முன்னிலை வகித்தனர். வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணைத் தலைவர் செந்தில்குமார் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். இது குறித்து உடற்பயிற்சி ஆசிரியை ரெஜினா கூறுகையில், ஒன்றிய அளவில் நேற்று 120 மாணவ- மாணவிகளுக்கு நடைபெற்ற போட்டியில் 18 மாணவ மாணவிகள் வெற்றி பெற்றனர்.இவர்கள் அனைவரும் அடுத்த கட்டமாக மண்டல அளவில் நடைபெறக்கூடிய போட்டியில் பங்கேற்கவுள்ளனர். மண்டல அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறக்கூடிய போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறக்கூடிய 44- வது உலக செஸ் போட்டியில் பங்கேற்க இருப்பதாக தெரிவித்தார்.