பெண்ணுக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது
வளையப்பட்டி சந்தையில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
மோகனூர்
மோகனூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ரவி என்பவர் மனைவி செல்வி (வயது 45). மோகனூர் கலைவாணி நகரை சேர்ந்தவர் லதா (44). இருவரும் உறவினர்கள். 2 பேரும் மோகனூர் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் வாரச்சந்தைகளில் பலகாரம் விற்பனை செய்து வருகின்றனர். லதாவின் கணவர் சிவா. இவர்கள் குடும்ப தகராறு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கு காரணம் செல்வி தான் என கூறி லதா, அவரது மகன் தேவா (26), கோட்டைசாமி (45) ஆகிய 3 பேரும், கடந்த 5-ந் தேதி வளைப்பட்டி வாரச்சந்தையில் பலகார விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த செல்வியிடம், எங்கள் குடும்ப பிரச்சினைக்கு நீ தான் காரணம் எனக்கூறி தகராறு செய்தனர். அப்போது ரவி எதற்காக எங்களிடம் பிரச்சினை செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு தேவாவும், கோட்டைசாமியும் அவரை சரமாரியாக தாக்கினா். மேலும் லதா எங்க குடும்ப பிரச்சினைக்கு நீங்கதான் காரணம். உங்களை கொல்லாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ரவி மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் துர்க்கை சாமி வழக்குப்பதிவு செய்து தேவா, கோட்டைச்சாமி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள லதாவை தேடி வருகின்றனர்.