திருச்சி ரோடு மேம்பாலத்தில் 2 கார்கள் மோதல்
கோவை-திருச்சி ரோடு புதிய மேம்பாலத்தில் 2 கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. மேம்பாலத்தில் தொடரும் விபத்துகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.;
கோவை-திருச்சி ரோடு புதிய மேம்பாலத்தில் 2 கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. மேம்பாலத்தில் தொடரும் விபத்துகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
திருச்சி ரோடு மேம்பாலம்
கோவை-திருச்சி ரோட்டில் ரெயின்போ காலனியில் இருந்து ராமநாதபுரம் பங்குச்சந்தை அலுவலகம் வரை 3 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலம் திறந்ததும் விபத்து ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மேம்பாலத்தில் 40 கி.மீ. வேகத்துக்கும் மேல் செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டதுடன், அங்கு 9 இடங்களில் வேகத்தடையும் அமைக்கப்பட்டது.
அதன் பின்னர் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. அனுமதிக்கப்பட்ட அன்றே விபத்தில் சிக்கி விற்பனை பிரதிநிதி உயிரிழந்தார். இதையடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர். தொடர்ந்து பாலம் 70 டிகிரி வளைவாக இருப்பதால் பாலத்தின் வடிவமைப்பு மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.
மீண்டும் விபத்து
இந்த நிலையில் நேற்று காலையில் திருச்சி ரோட்டில் உள்ள ரெயின்போ காலனியில் இருந்து மேம்பாலத்தில் ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது அங்கு இருந்த வேகத்தடையை கார் டிரைவர் கவனிக்கவில்லை. இதனால் அவர் திடீரென்று பிரேக் பிடித்தார். அப்போது பின்னால் வந்த மற்றொரு கார் அந்த கார் மீது மோதியது. இதில் 2 கார்களும் சேதம் அடைந்தன. காருக்குள் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள்.இந்த விபத்து காரணமாக மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்தனர். அத்துடன் இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நிரந்தர தீர்வு
கோவை-திருச்சி ரோடு மேம்பாலம் திறந்து ஒரு மாதத்திலேயே இதுவரை 4 விபத்துகள் நடந்து உள்ளன. இதன் காரணமாக இந்த மேம்பாலத்தில் செல்லவே வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே இங்கு விபத்துகள் நடப்பதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.