கிணற்றில் மூழ்கி 2 கல்லூரி மாணவர்கள் பலி

தேவூர் அருகே குறும்படம் எடுக்க சென்றபோது கிணற்றில் மூழ்கி 2 கல்லூரி மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-09-17 18:59 GMT

தேவூர்

கல்லூரி மாணவர்கள்

திருப்பூர் சத்யா நகர் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் புவனேஷ் (வயது 18). சேலம் மாவட்டம் சங்ககிரி நாகிசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ஜோசப் மகன் பாப்பேஜ் (17), ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் மகன் தீபக் (18), சேலம் மாவட்டம் தேவூர் காணியாளம்பட்டி பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகன் சஞ்சய் (18), தேவூரை அடுத்த சீரங்க கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் கிஷோர் (18). இவர்கள் 5 பேரும் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தனர். நண்பர்களான 5 பேரும் 3 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி குறும்படம் எடுக்க முடிவு செய்தனர்.

இதற்கு சீரங்க கவுண்டம்பாளையத்தை தேர்வு செய்த அவர்கள் நேற்று அங்கு சென்றனர். இதையடுத்து அங்குள்ள விவசாய தோட்டத்தில் குறும்படம் எடுப்பதற்காக சென்றனர். அப்போது சஞ்சீவுக்கு தோட்டத்தில் இருந்த கிணற்றில் கிணற்றில் இறங்கி குளித்தார். அப்போது நீச்சல் தெரியாததால் அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கினார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தீபக் கிணற்றில் குதித்தார். ஆனால் அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதையடுத்து சிறிது நேரத்தில் 2 பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

உடல்கள் மீட்பு

இதனைப் பார்த்து சத்தம் போட்ட நண்பர்கள் 3 பேரும் உடனடியாக சங்ககிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள், தேவூர் போலீசார், சங்ககிரி தாசில்தார் அறிவுடைநம்பி, துணை தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கினர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் சஞ்சய், தீபக் ஆகியோரின் உடல்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர். தொடர்ந்து போலீசார் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தேவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குறும்படம் எடுக்க சென்றபோது கிணற்றில் மூழ்கி 2 கல்லூரி மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்