2½ கிலோ கஞ்சா பறிமுதல்; சிறுவன் உள்பட 7 பேர் கைது

சுரண்டையில் 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சிறுவன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-11 18:45 GMT

சுரண்டை:

சுரண்டை பகுதியில் கஞ்சா நடமாட்டம் அதிகம் இருப்பதாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சுரண்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் ஆலோசனையின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சொரிமுத்து மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு சுரண்டையில் இருந்து ரெட்டைகுளம் செல்லும் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் ஒரு மோட்டார் சைக்கிள் வந்த 2 பேர் நிற்காமல் வேகமாக சென்றனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தபோது சுரண்டை சிவகுருநாதபுரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் காசிராஜன் (வயது 27), ஏசுதாசன் மகன் ஜோசப் (26) எனவும் தெரிய வந்தது. அவர்கள் இருவரும் கஞ்சா வியாபாரம் செய்து வந்தது தெரிய வந்தது.

மேலும் அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், ஒரு கும்பலாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் மகன் ராம்குமார் (23), மாடசாமி மகன் வெனிஸ் (22), முருகன் மகன் மதன் (22), செல்வம் மகன் மிக்கேல் பவின் (24) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் அனைவரும் கூட்டாக செயல்பட்டு சுரண்டை பகுதியில் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 2½ கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. 7 பேரும் கைது செய்யப்பட்டு ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைதான சிறுவன் பாளையங்கோட்டை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டான். மற்ற அனைவரும் தென்காசி ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்