மின்னல் தாக்கி பெண் உள்பட 2 பேர் பலி

பண்ருட்டி அருகே நடந்த தனித்தனி சம்பவத்தில் மின்னல் தாக்கியதில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-07-21 17:06 GMT

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே காட்டுகூடலூர் பெரியார் தெருவை சேர்ந்தவர்கள் அய்யப்பன மனைவி தேவி (வயது 30), ஆறுமுகம் மனைவி அமுதா (50), சக்கரபாணி மனைவி வனமயில் (53). இவர்கள் 3 பேரும் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் அதே பகுதியில் உள்ள சீனிவாச வாத்தியார் என்பவரது முந்திரி தோப்பு அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மழையில் நனையாமல் இருக்க தேவி உள்பட 3 பேரும் அங்குள்ள ஒரு மரத்தடியில் ஒதுங்கினர். இதில் மின்னல் தாக்கியதில் தேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

வனமயில், அமுதா ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் பண்ருட்டி அருகே எஸ்.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வமூர்த்தி (வயது 45). விவசாயி. இவர் காடாம்புலியூர் அடுத்த பொியபுறங்கணி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மழை பெய்ததால், அதில் நனையாமல் இருக்க அங்குள்ள காளிகோவில் ஓரம் செல்போனில் பேசியபடி நின்று கொண்டிருந்தார்.

அப்போது மின்னல் தாக்கியதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே செல்வமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த தகவலின் பேரின் பண்ருட்டி தாசில்தார் சிவகார்த்திகேயன் மற்றும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்