கரடிகள் தாக்கி 2 பெண்கள் படுகாயம்

வால்பாறையில் கரடிகள் தாக்கி 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-10-05 19:00 GMT

வால்பாறை அருகில் உள்ள மாணிக்கா எஸ்டேட் புதுக்காடு பகுதி 38-ம் நம்பர் தேயிலை தோட்டத்தில் நேற்று காலை 10 மணியளவில் பெண் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தேயிலை செடிகளுக்கு உரம் இடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தேயிலை தோட்ட பகுதி வழியாக ஓடி வந்த 2 கரடிகள் பணியில் ஈடுபட்டிருந்த ஜார்க்கண்ட் மாநில பெண் தொழிலாளி சுமதி குமாரி (வயது 25) என்பவர் மீது முதலில் பாய்ந்து தாக்கியுள்ளது. இதில் அவர் படுகாயம் அடைந்து கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அதே மாநிலத்தை சே்ாந்த மற்றொரு பெண் தொழிலாளி ஜிந்திகுமாரி (26) அங்கு வந்து உள்ளார். அப்போது அவரையும் கரடிகள் தாக்கியது. இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. 2 பெண்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த தொழிலாளர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள், அந்த கரடிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.


இதையடுத்து தோட்ட கண்காணிப்பாளர் மற்றும் தொழிலாளர்கள் எஸ்டேட் நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுத்து கரடிகள் தாக்கியதில் படுகாயம் அடைந்த 2 பெண்களையும் சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 2 பெண்களுக்கும் வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி இருவரும் பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு ஆறுதல் கூறி வனத் துறையின் சார்பில் தலா ரூ/10 ஆயிரம் நிவாரண தொகையை வழங்கினார்கள். மேலும் சம்மந்தப்பட்ட தேயிலை தோட்ட பகுதியில் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்