மரத்தில் தனியார் பஸ் மோதி 20 பேர் காயம்
அன்னூர் அருகே மரத்தில் தனியார் பஸ் மோதி 20 பயணிகள் காயம் காயம் அடைந்தனர்.;
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கோவை நோக்கி பயணிகளுடன் தனியார் பஸ் புறப்பட்டது.
அந்த பஸ் அன்னூர் எல்லப்பாளையம் பிரிவு அருகே வேகமாக வந்து கொண்டு இருந்தது. அப்போது சாலையை மோட்டார் சைக்கிளில் ஒருவர் திடீரென்று கடக்க முயன்றார்.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ், அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் காயம் அடைந்தார். அதன்பிறகும் நிற்காமல் வேகமாக சென்ற தனியார் பஸ் ரோட்டோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி நின்றது. இதனால் பஸ்சில் இருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்து கூச்சல் போட்டனர்.
விபத்தை ஏற்படுத்திய டிரைவர், பஸ்சை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி சென்றார்.
இது குறித்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னூர் - கோவை சாலையில் தனியார் மற்றும் அரசு பஸ்கள் அதிகமாக இயக்கப்படுகின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.