வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் 10 பெட்டிகளில் 2 ஆயிரம் பேர் பயணம்

Update: 2023-03-05 19:35 GMT

சூரமங்கலம், மார்ச்.6-

வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் 10 பெட்டிகளில்2 ஆயிரம் பேர் பயணம் செய்தனர்.

ஹோலி பண்டிகை

வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை நாளை மறுநாள் (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இந்த பண்டிகை கொண்டாட தமிழகத்தில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் ரெயில் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

அதாவது கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே பீகார் மாநிலம் பாட்னாவிற்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ெரயில் (வண்டி எண்- 22643) மூலம் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பீகாருக்கு சென்றனர்.

2 ஆயிரம் பேர் பயணம்

இதற்கிடையே சேலம் ெரயில் நிலையத்திற்கு நேற்று காலை 7.36 மணிக்கு எர்ணாகுளம்- பாட்னா வாராந்திர விரைவு ெரயில் 5-வது நடைமேடைக்கு வந்தது. இந்த ெரயிலில் ஏற வடமாநில தொழிலாளர்கள் முண்டியடித்துக் கொண்டு முன்பதிவு பெட்டிகளில் ஏறினர்.

இதில் சிலர் ெரயில் பெட்டியின் அவசரவழி வழியாகவும் ஏறி குதித்தனர். இந்த ரெயிலில் சேலத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்டோர் ஏறி சென்றனர்.

இந்த ெரயிலில் வழக்கமாக 72 பேர் செல்லும் பெட்டியில் 200 பேர் அமர்ந்திருந்தனர். அதாவது, 10 பெட்டிகளிலும் 2 ஆயிரம் பேர் கடும் இடநெருக்கடியில் பயணம் செய்தனர். மேலும் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ெரயிலில் ஏற முடியாமல் சேலம் ஜங்ஷன் ெரயில் நிலையத்தில் நின்றனர்.

இரவு வரை காத்திருப்பு

அவர்கள் நேற்று பிற்பகல் வந்த எர்ணாகுளம்- டாட்டா நகர் எக்ஸ்பிரஸ், ஆலப்புழா- தன்பாத் ஆகிய ெரயில்களில் ஏறி சொந்த ஊர் சென்றனர்.

மேலும் ெரயிலுக்காக காத்திருந்த 500-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் நேற்று இரவு வரை காத்திருந்து சேலம் வந்த கோவை - பாட்னா சிறப்பு ெரயிலில் ஏறி சொந்த ஊர் சென்றனர். இதனால் நேற்று சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களின் தலைகளாக காட்சி அளித்தது.

Tags:    

மேலும் செய்திகள்