ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் செய்தது நம்பிக்கை துரோகம்; டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் தமிழக மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக டாக்டர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Update: 2017-01-16 20:50 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஏமாற்றம்

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடை நீக்கப்படாத நிலையில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கல் வெறுமையாக கொண்டாடப்பட்டிருக்கிறது. சில இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்ட போதிலும், வழக்கமான உற்சாகமும், கொண்டாட்டமும் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படாததால் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் கவலை அடைந்துள்ள நிலையில், மத்தியிலும், மாநிலத்திலும் ஆண்ட கட்சிகளும், ஆளும் கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கின்றன. இவர்கள் அனைவருமே காரணம் என்பதை மறைத்துவிட்டு, மக்களை ஏமாற்ற முயல்வது தான் கொடுமை. ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்க காரணமாக இருந்தவை தி.மு.க.வும், காங்கிரசும் தான்.

நம்பிக்கை துரோகம்

அதேநேரத்தில் தி.மு.க., காங்கிரஸ் செய்த பாவங்களை சுட்டிக்காட்டி அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் தப்பித்து விட முடியாது. அந்த இரு கட்சிகளும் செய்தது பாவங்கள் என்றால், அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் தமிழக மக்களுக்கும் செய்தது நம்பிக்கை துரோகமாகும். தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரலாம். தெரிந்தே செய்த நம்பிக்கை துரோகத்துக்கு மன்னிப்பு உண்டா? ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தாமும் போராட நினைப்பதாகவும், மத்திய மந்திரி பதவி தான் தடுப்பதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என்பது தான் தங்களின் விருப்பம்; அதற்காக தடையை மீறுவதில் கூட தவறில்லை என்று பா.ஜனதா தலைவர்கள் கூறிவருகின்றனர். பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா அவரது வீட்டுக் காளையை அவிழ்த்து விட்டு தடையை மீறியிருக்கிறார். அவர்கள் கூறுவது உண்மையெனில் அடுத்த சில வாரங்களிலாவது ஜல்லிக்கட்டு நடத்த என்ன செய்யப்போகிறார்கள்? மக்களின் உணர்வுகளை மதித்து, ஜல்லிக்கட்டுக்காக சட்டத் திருத்தம் செய்யவேண்டும் என்று மக்களுடன் நின்று மத்திய அரசுக்கு எதிராக போராட முன்வர வேண்டும். அவர்கள் செய்வார்களா?.  இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

மேலும் செய்திகள்