பணமதிப்பு நீக்கத்துக்கு எதிராக ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு 20–ந் தேதி காங்கிரஸ் போராட்டம்; சு.திருநாவுக்கரசர் அறிவிப்பு

பணமதிப்பு நீக்கத்துக்கு எதிராக 20–ந் தேதி ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்த இருப்பதாக சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Update: 2017-01-16 20:50 GMT

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ரிசர்வ் வங்கி முற்றுகை போராட்டம்

பிரதமர் நரேந்திர மோடியின் பண மதிப்பு நீக்க திட்டத்துக்கு எதிராக 20–ந் தேதி சென்னையில் ரிசர்வ் வங்கி முற்றுகையிடும் போராட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தை தொடர்ந்து, பண மதிப்பு நீக்கம் குறித்து தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் சிறப்பு பேச்சாளர்கள் மூலம் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறும்.

தமிழகத்தில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கமாக நடைபெறும் இடங்களை விட கூடுதலான இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

விவசாயிகள் தற்கொலை

விவசாயிகள் தற்கொலை தமிழகம் முழுவதும் தொடர்கதையாக உள்ளது. சுமார் 150–க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். ஆனால் 15, 16 பேர் தான் இறந்துள்ளனர் என தமிழக அரசு அறிவித்துள்ளது கவலையளிக்கிறது. உயிர் இழந்த சுமார் 150 விவசாயிகள் குடும்பத்துக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட காலண்டர் மற்றும் டைரிகளில் மகாத்மா காந்தி படத்திற்கு பதிலாக பிரதமர் மோடியின் படம் அச்சடிக்கப்பட்டிருப்பது மலிவான விளம்பரம், மலிவான முயற்சி என காங்கிரஸ் சார்பில் கண்டிக்கிறேன்.

‘நீட்’ நுழைவுத் தேர்வு

‘நீட்’ நுழைவுத் தேர்வை பொறுத்தவரையில், தமிழக அரசு சரியான முடிவு எடுக்காமல், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இதனால் தமிழகத்தின் சாதாரண குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள், ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.

இதனை கண்டித்து மாணவர்கள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் விரைவில் மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

அரசியலில் ரஜினிகாந்த்

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். யாரும், யாரை பற்றியும் கருத்து கூறலாம். ரஜினியின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லலாமே தவிர, அவர் அரசியலுக்கு வரக்கூடாது என யாரும் கூற முடியாது.  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்