ஜல்லிக்கட்டு ‘போராட்டக்களத்திற்கு அரசியல்வாதிகள் வரவேண்டாம்’ இளைஞர்கள் திட்டவட்டம்

ஜல்லிக்கட்டு ‘போராட்டக்களத்திற்கு அரசியல்வாதிகள் வரவேண்டாம்’ என இளைஞர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

Update: 2017-01-17 09:12 GMT

சென்னை, 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு அனுமதிக்கான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. 

மதுரை மாவட்டம் அலங்கா நல்லூரில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அலங்காநல்லூரில் கடந்த 21 மணி நேரமாக ஜல்லக்கட்டு நடத்த அனுமதி கோரி 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். விடிய, விடிய நடந்த போராட்டத்துக்கு பின்னர் போலீசார் 10 நிமிட அவகாசம் கொடுத்தனர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டதால் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். 

இளைஞர்கள் கைது செய்யப்பட்ட தகவல் அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் அணி அணியாக திரண்டு அலங்காநல்லூர் வருகின்றனர். அங்குள்ள வாடிவாசல் அருகே பொதுமக்கள் மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் திரண்டதால் மீண்டும் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

 மதுரையில் பாலமேடு, வாடிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் அதிகமானோர் சாலை மறியலில் போராட்டம் நடத்தி வருகிறார். 

சென்னை மெரினாவிலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாகவும், பீட்டாவிற்கு தடைவிதிக்க கோரியும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அலங்காநல்லூரில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்து உள்ளது, ஆங்காங்கே போராட்டங்கள் தொடங்கி உள்ளது.
 
அலங்காநல்லூரில் பாரம்பரிய போட்டிக்கான இந்த போராட்டத்தில் அரசியல் பற்றி பேசக் கூடாது என இளைஞர்கள் அனைவரும் முடிவு செய்திருந்தனர். இளைஞர்கள் ஜல்லிக்கட்டு ‘போராட்டக்களத்திற்கு அரசியல் கட்சிகள் வரவேண்டாம்’ என திட்டவட்டமாக கூறிவிட்டனர். 

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அரசியல் கலக்க இளைஞர்கள் விரும்பவில்லை. 

சென்னையில் போராட்டம் நடக்கும் இடத்திற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சென்றபோது, மக்கள் போராட்டத்தில் பங்குபெற மு.க.ஸ்டாலினுக்கு தடை விதித்தனர். மேலும், அரசியல்வாதிகள் போராட்டத்தில் பங்குபெற வேண்டாம் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். 

இளைஞர்கள் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவிக்கும் என ஸ்டாலின் கூறினார்.  

மேலும் செய்திகள்