39 மணி நேரமாக தர்ணா; அலங்காநல்லூரில் நீடிக்கும் போராட்டம்

சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடை காரணமாக 3-வது ஆண்டாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

Update: 2017-01-18 00:30 GMT
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவர வலியுறுத்தி அலங்காநல்லூரில் போராட்டம் நீடிக்கிறது. சென்னை மெரினாவிலும் ஏராளமானவர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை,

இதனால் பொங்கல் பண்டிகைக்கு முந்திய வாரத்தில் இருந்தே தமிழகம் முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் கிளர்ந்து எழுந்து போராடி வருகிறார்கள்.

அலங்காநல்லூர்

ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற மதுரை அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் பொங்கல் அன்றும், மறு நாளும் தீவிர போராட்டங்கள் நடைபெற்றன.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் தை 3-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறாததால் இளைஞர்கள் ஆவேசம் அடைந்து போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் கல்லூரி மாணவர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், முகநூல் நண்பர்கள், மாடுபிடி வீரர்கள், மாடு வளர்ப்போர் என 300-க்கும் மேற்பட்டவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பு முற்றுகை போராட்டம் தொடங்கினர். இதில் சென்னை, கோவை, புதுச்சேரியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

கொட்டும் பனியில்...

மாலை 5 மணியுடன் போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஆனால் யாரும் கலைந்து செல்லவில்லை. அங்கேயே அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இரவில் கொட்டும் பனியிலும் அப்படியே படுத்துக்கிடந்தனர்.

விடிய, விடிய அவர்கள் போராடிய நிலையில், நேற்று அதிகாலையில் வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் ஒலிபெருக்கி மூலம் பேசி, போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் இளைஞர்கள் ஜல்லிக்கட்டை நடத்தாமல் இங்கிருந்து செல்லமாட்டோம் என்று கூறினார்கள்.

227 பேர் கைது

இதைத்தொடர்ந்து காலை 6 மணி அளவில் 3 பெண்கள் உள்பட 227 பேரை வலுக்கட்டாயமாக கைது செய்து போலீசார் வாகனத்தில் ஏற்றினார்கள். கைதான அனைவரும் அருகில் உள்ள வாடிப்பட்டியில் ஒரு தனியார் கல்யாண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வாகனத்தில் ஏற்றிச் சென்ற தகவலை அறிந்த அலங்காநல்லூர் கிராம மக்கள் நேற்று காலை 6 மணிக்கு அங்குள்ள கேட்டுக்கடை பாலத்தின் அருகில் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம பெண்கள், மாணவர்கள், மாடுபிடி வீரர்கள், மாடு வளர்ப்போர்கள் என 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

தகவல் அறிந்ததும் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திரபிதாரி விரைந்து சென்று, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், “கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும். ஜல்லிக்கட்டு விழாவை உடனே நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்கள்.

உடனே அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். பின்னர் சிலர் விடுவிக்கப்பட்டு அலங்காநல்லூர் அழைத்து வரப்பட்டனர். ஆனால் அனைவரும் விடுவிக்கப்படும் வரை மறியல் தொடரும் என்று பொதுமக்கள் தெரிவித்துவிட்டனர். நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் நேற்று இரவு 11.30 மணி வரை முடியவில்லை. 39 மணி நேரத்துக்கு மேலாக போராட்டம் தொடருகிறது.

உள்ளிருப்பு போராட்டம்

இதற்கிடையே, கைதாகி வாடிப்பட்டி திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்தவர்கள் போலீஸ் விடுவிப்பதாக அறிவித்தும் வெளியேற மறுத்துவிட்டனர்.

“அவசர சட்டம் கொண்டு வந்து உடனே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். வாடிவாசல் வழியாக 5 காளைகளையாவது திறந்துவிட வேண்டும். அதுவரை நாங்கள் ஓயப்போவதில்லை. போராடிக்கொண்டே இருப்போம்” என்று கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் 2-வது நாளாகியும் அலங்காநல்லூரில் போராட்டங்கள் நீடித்துக்கொண்டே இருந்தன.

சீமான்-சரத்குமார்

இந்நிலையில், அலங்காநல்லூரில் மறியல் நடந்த இடத்திற்கு எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், மூர்த்தி, கருணாஸ், திரைப்பட இயக்குனர் சீமான், அமீர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் வந்தனர். அவர்கள் கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஜல்லிக்கட்டை நடத்த மத்திய-மாநில அரசுகளிடம் வலியுறுத்துவோம் என்று தெரிவித்தனர்.

அலங்காநல்லூர் சுற்றுவட்டார கிராம மக்கள் கூட்டம், கூட்டமாக ஊர்வலம் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தங்களையும் அதில் இணைத்துக்கொண்டனர். இதனால் மக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

அத்துடன், பாலமேடு, தெத்தூர், புதுப்பட்டி, சத்திரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்களும் ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டனர்.

பஸ்கள் ஓடவில்லை

பாதுகாப்பு காரணங்களால் நேற்று 5-வது நாளாக பாலமேடு, அலங்காநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.

மதுரை சாலை, வாடிப்பட்டி, பாலமேடு, சத்திரபட்டி, உள்ளிட்ட அலங்காநல்லூர் இணைப்பு சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் சோதனைச் சாவடி அமைத்து அலங்காநல்லூருக்கு செல்பவர்களை போலீசார் தடுத்து வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  கடந்த 2 நாட்களாக அலங்காநல்லூரில் கடைகள் மூடியே கிடக்கின்றன.

சென்னையிலும் போராட்டம்

அலங்காநல்லூரில் கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

காலை தொடங்கிய போராட்டம் இரவு வரை நீடித்தது. அவர்களை கலைந்து செல்ல போலீசார் தொடர்ந்து வலியுறுத்தினர். முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்