ரூ.4 கோடி ஐம்பொன் விநாயகர் சிலை மீட்பு துப்பாக்கி முனையில் 5 பேர் கைது

புதுச்சேரிக்கு கடத்த முயன்ற ரூ.4 கோடி ஐம்பொன் விநாயகர் சிலையை கடலூரில் போலீசார் மீட்டனர்.

Update: 2017-02-23 21:45 GMT
கடலூர்,

புதுச்சேரிக்கு கடத்த முயன்ற ரூ.4 கோடி ஐம்பொன் விநாயகர் சிலையை கடலூரில் போலீசார் மீட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.

துப்பாக்கி முனையில்...

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து ஐம்பொன் சிலையை கடத்தி, கடலூர் வழியாக புதுச்சேரிக்கு காரில் சிலர் கொண்டு செல்வதாக சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று மஞ்சக்குப்பம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக 2 கார்கள் வேகமாக வந்தன. அந்த காரில் 5 பேர் இருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்குள்ள கார் நிறுத்தும் இடத்துக்குள் புகுந்தனர். இதை நோட்டமிட்ட போலீசார் அவர்களை நோக்கி சென்ற போது 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். உடனே அவர்களை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்தனர்.

ஐம்பொன் விநாயகர் சிலை

இதையடுத்து அவர்கள் வந்த கார்களை போலீசார் சோதனை செய்தனர். அதில் 1½ அடி உயரம், 25 கிலோ எடை கொண்ட ஐம்பொன் விநாயகர் சிலை இருந்தது.

பிடிபட்ட 5 பேரையும் போலீசார் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் ஞானசேகரன் (வயது 44), கடலூர் மஞ்சக்குப்பம் முகுந்தன் சர்மா (30), மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த வினோத் (31), செந்தில்வேல் (29), ராஜா (23) என தெரியவந்தது.

5 பேர் கைது

மயிலாடுதுறையை சேர்ந்த 3 பேரும் அங்குள்ள பழமைவாய்ந்த ஒரு கோவிலில் இருந்த விநாயகர் சிலையை கடத்தி, அதை ஞானசேகரன், முகுந்தன் சர்மா ஆகியோரிடம் விற்க கடலூர் வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுபற்றி ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

மீட்கப்பட்ட ஐம்பொன் விநாயகர் சிலை சுமார் 1,600 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக இருக்கக்கூடும். இதன் மதிப்பு ரூ.4 கோடி ஆகும். இந்த சிலையை புதுச்சேரியில் உள்ள பிரபல சிலை கடத்தல்காரருக்கு கடத்திச்செல்ல முற்பட்டு இருக்கிறார்கள். இதை புதுச்சேரியில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தி செல்ல முயற்சி செய்தார்களா? என விசாரித்து வருகிறோம் என்றனர்.

வெளிநாடுகளுக்கு கடத்தல்

தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து இதுவரை ரூ.150 கோடி மதிப்புள்ள சாமி சிலைகளை மீட்டு இருக்கிறோம். ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாடுகளில் இருந்து சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் மட்டும் இன்னும் 160 விலை உயர்ந்த சிலைகளை மீட்க இருக்கிறோம். சிங்கப்பூரில் இருந்து இன்னும் 13 சாமி சிலைகளை மீட்க வேண்டி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள சிவன் கோவிலுக்கு சொந்தமான 4 சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து மொத்தம் ரூ.1,000 கோடி மதிப்புள்ள சாமி சிலையை மீட்டு கொண்டு வர வேண்டியதிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் சிலையை கடத்தி வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதை முற்றிலுமாக தடுத்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்