கிண்டி ரெயில் நிலையத்தில் பெண் டாக்டர்-டிக்கெட் பரிசோதகர் இடையே வாக்குவாதம்

கிண்டி ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதனையின் போது பெண் டாக்டருக்கும், டிக்கெட் பரிசோதகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Update: 2017-02-24 21:30 GMT
ஆலந்தூர், 

கிண்டி ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதனையின் போது பெண் டாக்டருக்கும், டிக்கெட் பரிசோதகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது டாக்டருக்கு ஆதரவாக பயணிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம்

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி மின்சார ரெயில் நேற்று சென்றது. கிண்டியில் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்ற போது அதில் இருந்து இறங்கிய பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை ஆய்வாளர் முருகானந்தம், பரிசோதகர் கோபாலன் ஆய்வு செய்தனர். அரசு மருத்துவமனை பெண் டாக்டர் சுமதி முதல் வகுப்பு பெட்டியில் இருந்து இறங்கினார்.

அவரிடம் பரிசோதகர் கோபாலன் டிக்கெட் கேட்டார். உடனே பெண் டாக்டர் தன்னிடம் இருந்த மாதாந்திர சீசன் அட்டையை காண்பித்தார். அடையாள அட்டையை கேட்டபோது ஆதார் அட்டையை டாக்டர் காட்டினார். நகல் ஆவணத்தை ஏற்க முடியாது என கூறி டிக்கெட் பரிசோதகர் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்குள்ள பரிசோதகர் அறையில் வைத்து பெண் டாக்டரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

போலீசில் புகார்

இதை கண்ட சக பயணிகள் பரிசோதகர் அறை முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது டிக்கெட் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தெரிவித்தனர். இது பற்றி உரிய புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து பெண் டாக்டர் எழும்பூர் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அதேபோல தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பரிசோதகர் கோபாலனும் எழும்பூர் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். 2 பேரின் புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்