நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பை ரத்து செய்ய கோரிக்கை: உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி மு.க.ஸ்டாலின் பேட்டி

நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி உறுதி அளித்து இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2017-02-24 22:15 GMT
சென்னை,

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி உறுதி அளித்து இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜனாதிபதி உறுதி

டெல்லி பயணம் சிறப்பாக இருந்தது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து தமிழகத்தில் கடந்த 18-ந்தேதி சட்டசபையில் நடந்த ஜனநாயக படுகொலை பற்றி எடுத்துச்சொல்ல சென்றோம். நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பை ரத்துசெய்யக்கோரி மனு தந்து உள்ளோம். அந்த மனுவை ஜனாதிபதி படித்து பார்த்து எங்களிடம் சில விளக்கங்களை கேட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்து உள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து தமிழகத்தில் நடந்து வரும் அரசு பற்றியும், சட்டசபையில் நடந்த சம்பவங்கள் பற்றியும் பேசினோம். சோனியாகாந்தியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். அவரும் தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

கவர்னர் பதில்

முதல்-அமைச்சராக, அமைச்சர்களாக இருப்பவர்கள் அரசியல் சட்டத்தின் அடிப்படையில் விதிகளை மீற மாட்டோம். அதன்படி நடப்போம் என உறுதிமொழி எடுத்து பதவி பிரமாணம் செய்து கொண்டனர். ஆனால் அவர்கள், சுப்ரீம்கோர்ட்டால் தண்டனை பெற்ற குற்றவாளியின் (ஜெயலலிதாவின்) பெயரை பயன்படுத்தி, அவருடைய பிறந்த நாளுக்காக ஒரு அரசு விழாவை நடத்தி அதில் பங்கேற்கிறார்கள் என்று சொன்னால் இதற்கு தமிழகத்தின் பொறுப்பு கவர்னர் எங்களுக்கு பொறுப்பாக பதில் சொல்ல வேண்டும்.

தலைவர்கள் பிறந்த நாட்களில் சிறையில் இருக்கிற கைதிகளுக்கு இனிப்பு வழங்குவது வழக்கம். ஆனால் சிறைக்கைதியாக தண்டனை பெற்்று இருக்கின்ற ஒருவருடைய பிறந்தநாளுக்கு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

இதற்கு சட்டரீதியான நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பிறந்தநாள் அரசு விழாவாக நடக்கிறது. இதற்கு விரைவில் முடிவு வரும். முடிவு வருகின்ற சூழ்நிலையை தி.மு.க. உருவாக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்