இசை என்பது பொதுச் சொத்து: ‘இளையராஜா செய்தது தவறு’; கங்கை அமரன் பேட்டி

இசை என்பது பொது சொத்து என்றும், இளையராஜா செய்தது தவறு என்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்தார்.

Update: 2017-03-20 21:45 GMT

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக கங்கை அமரன் நிறுத்தப்பட்டு இருக்கிறார். அவர் ஆர்.கே.நகர் தொகுதியில் தெரு தெருவாக சென்று கடந்த இரு தினங்களாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று காலை தண்டையார்பேட்டை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து, மாலையில் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஆர்.கே.நகர் தொகுதியில் மீனவர் பிரச்சினை, போக்குவரத்து நெரிசல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது. இந்த பிரச்சினைகளையெல்லாம் தீர்ப்போம் என்று பலர் சொன்னார்கள். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. பொதுநலன் கொண்ட நான் அதை செய்வேன். இந்த தொகுதி மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அந்த மாற்றம் கண்டிப்பாக வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்றுக் கொள்ள முடியாது

இதையடுத்து மேடை நிகழ்ச்சிகளில் தன்னுடைய இசையில் வந்த பாடல்களை பாடக்கூடாது என்று எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இளையராஜா வக்கீல் நோட்டீசு அனுப்பியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு கங்கை அமரன் பதிலளித்து கூறியதாவது:–

என்னை பொறுத்தவரையில், இளையராஜாவின் இசையை வியாபாரமாக பார்க்கவில்லை. அவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தன்னுடைய இசையில் வெளிவந்த பாடல்களை பாடக்கூடாது என்று சொல்வதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அவரை தடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இளையராஜா செய்தது தவறு. அவருடைய இந்த செயல் அவருக்கு கெட்ட பெயரை எடுத்து கொடுத்து இருக்கிறது.

நியாயமல்ல

அவர்கள் இருவரும் சமாதானம் ஆனால் எனக்கு ரொம்ப சந்தோ‌ஷம் தான். அவருடைய சகோதரன் என்ற முறையில் என்னால் அவருக்கு அறிவுரை கூற முடியாது. அது அவருடைய தனிப்பட்ட வி‌ஷயம். அவர் யாரும் எட்டிப்பார்க்க முடியாத உயரத்தில் இருக்கிறார்.

நான் இசையமைப்பாளர், ஒரு ரசிகன் என்ற பெயரில் இந்த பதிலை சொல்கிறேன். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் வழக்கு தொடர இருப்பதாக கூறி இருக்கிறார். நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

இசை என்பது பொது சொத்து. இளையராஜா செய்தது நியாயமல்ல. இதுகுறித்து சட்டபடி சந்திப்பதற்கு உரிமை உண்டு.  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்