ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் “என் ஆதரவு யாருக்கும் இல்லை” ரஜினிகாந்த் அறிவிப்பு

“ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் என் ஆதரவு யாருக்கும் இல்லை” என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து உள்ளார்.

Update: 2017-03-23 23:30 GMT
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் 1995-ம் ஆண்டு ‘பாட்ஷா’ பட விழாவில் வெடிகுண்டு கலாசாரம் பற்றி அதிரடியாக பேசி பரபரப்பு ஏற்படுத்தியதில் இருந்து அவரது அரசியல் பிரவேச எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீடித்து வருகிறது. 1996 தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக தி.மு.க-த.மா.கா. கூட்டணியை உருவாக்கி தி.மு.க ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக இருந்தார்.

அதன்பிறகு சினிமாவில் சிகரெட் பிடிப்பதை சர்ச்சையாக்கி பாட்டாளி மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் வேலை செய்யும்படி ரசிகர்களை கேட்டுக்கொண்டார். இதனால் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப்போவது உறுதி என்ற பரபரப்பான பேச்சுகள் கிளம்பின. ரசிகர்களும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று சுவரொட்டிகள் ஒட்டி ஆர்வத்தை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர்.

ஒதுங்கினார்

ஆனால் ரஜினிகாந்த் அதற்கு பிடி கொடுக்காமலேயே இருந்தார். ஒரு கட்டத்தில் எந்த கட்சியையும் ஆதரிப்பது இல்லை என்ற முடிவுக்கு மாறி அரசியல் சார்பான கருத்துகள் வெளியிடுவதையும் நிறுத்தி விட்டு 8 வருடங்களாக ஒதுங்கி இருக்கிறார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடி போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தபோது பா.ஜனதாவுக்கு ஆதரவான முடிவை வெளியிடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அப்போதும் அமைதியாக இருந்து விட்டார்.

இந்த நிலையில் தற்போது நடைபெற உள்ள ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா கட்சியினர் தங்களுக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்து உள்ளார் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கினர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் கங்கை அமரன் நேரில் சந்தித்து பேசி விட்டு, “எனக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். அவர் பா.ஜனதாவில் சேருவாரா? என்று கேட்கிறீர்கள். நீங்கள் பார்ப்பது ‘டிரெய்லர்’தான். ‘மெயின் பிக்சர்’ தயாராகிறது. விரைவில் நல்ல முடிவு வரும்” என்றார்.

ஆதரவு இல்லை

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, “ரஜினிகாந்த் எங்கள் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். அவர் தேசிய சிந்தனை கொண்டவர். நல்லவர் நல்லவர்களோடு சேருவார்” என்றார். இதனால் ரஜினி ரசிகர்கள், ஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபட தயாரானார்கள்.

இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார். “ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் எனது ஆதரவு யாருக்கும் இல்லை” என்று அவர் அதில் கூறி இருக்கிறார். 

மேலும் செய்திகள்