பலியான 4 மாணவிகள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு

தக்கலை அருகே வேன், லாரி மோதிக்கொண்டதில் பலியான 4 மாணவிகள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கும்படி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2017-03-25 21:45 GMT
சென்னை,

இதுகுறித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

4 மாணவிகள் மரணம் 

கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், பத்மனாபபுரம் கிராமம், தேசிய நெடுஞ்சாலையில், தக்கலை அருகே புலியூர்குறிச்சி என்னும் இடத்தில் 24–ந் தேதியன்று ஸ்ரீ அய்யப்பா மகளிர் கல்லூரி மாணவிகளை ஏற்றி தக்கலை நோக்கி வந்து கொண்டிருந்த மகேந்திரா வேனும், நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த கல்லூரி மாணவிகள் பரைக்கோடு, வைகுண்டபுரத்தைச் சேர்ந்த அர்ஜுணனின் மகள் மஞ்சு; திருவிதாங்கோடு புங்கரையைச் சேர்ந்த சந்திரனின் மகள் சிவரஞ்சினி; சக்தி நகரைச் சேர்ந்த முருகனின் மகள் தீபா; மண்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகரின் மனைவி சங்கீதா ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

நிவாரண நிதி 

இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்