நடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு செல்வது தவறு இல்லை பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழர்களுக்கு வீடு வழங்குவதற்காக நடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு செல்வதில் தவறு இல்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2017-03-25 22:45 GMT
நாகர்கோவில், 

குமரி மாவட்டம் தக்கலை அருகே விபத்தில் பலியான மாணவிகளின் குடும்பத்தினரை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். முன்னதாக அவர், நாகர்கோவில் பார்வதிபுரத்தில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தக்கலை அருகே வேனும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவிகள் 4 பேர் பலியான சம்பவம் எனக்கு டெல்லியில் இருக்கும் போது தெரியவந்தது. இறந்த மாணவிகளின் இறுதி சடங்கில் பங்கேற்று அவர்களுடைய உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளேன். தமிழகத்தில் அதிகமாக விபத்துகள் நடக்கும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 780 இடங்களில் விபத்து தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஓட்டு சீட்டு முறை

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வீடுகளுக்கு தங்கம் வழங்கப்படுகிறது. தங்கத்தை தட்டில் வைத்து வழங்குகிறார்கள். வாக்காளர்களுக்கு எடை போட்டு தங்கம் கொடுக்கிறார்கள். இதில் ஒரு கட்சி, மற்றொரு கட்சியை குறை கூற முடியாது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குதல், கள்ள ஓட்டு போடுதல் ஆகியவற்றை தடுக்க வேண்டும். ஓட்டு சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். எனவே, அனைத்து ஏற்பாடுகளுக்கும் தேர்தல் ஆணையம் தயாராக இருப்பது அவசியம்.

எந்த ஒரு அழுத்தத்திற்கும் ஆளாகாமல் தேர்தல் ஆணையம் கூறும் பணிகளை போலீசார் சரியாக செய்தால் தேர்தலை ஒழுங்காக நடத்தலாம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக அமைய வேண்டும். தேர்தலில் பா.ஜனதா கட்சி தனது முழு பலத்தையும் காட்டும். வெற்றியை நோக்கிய பிரசார பயணத்தை பா.ஜனதா தொடங்கியுள்ளது.

இணக்கமாக...

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சி அல்ல. ஒரு கட்சியில் சின்னம் என்பது தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் கொடுக்கும். சின்னம் முடக்கப்பட்டிருப்பது 1½ கோடி அ.தி.மு.க. தொண்டர்களுக்கு தலைகுனிவையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதற்கு மத்திய அரசு காரணம் இல்லை. அ.தி.மு.க. கட்சியின் தலைமையும், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட குளறுபடிகளுமே காரணம்.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு வீடு வழங்குவதற்காக ரஜினிகாந்த் செல்வதில் தவறு இல்லை. தமிழனுக்கு நல்லது செய்பவர்கள் யாராக இருந்தாலும், ஏன் எனக்கு எதிரியாகவே இருந்தாலும் அவரை நான் பாராட்டுவேன்.

அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தம்பித்துரை ஆகியோர் பா.ஜனதாவுடன் இணக்கமாக உள்ளனர். மேலும் தனிப்பட்ட முறையில் திருமாவளவன், திருநாவுக்கரசர் ஆகியோரும் இணக்கமாகவே உள்ளார்கள்.

துரோகம்

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் கல்வித்தரம் சீரழிந்து உள்ளது. இது அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் செய்த துரோகம். அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக கொண்டு வரவேண்டும். தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.39 ஆயிரம் கோடி கேட்கிறார்கள். மத்திய அரசு ரூ.1,748 கோடி வழங்கியிருக்கிறது.

தமிழக அரசு எந்த அடிப்படையில் ரூ.39 ஆயிரம் கோடி கேட்கிறது என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்