தமிழகத்தில் அ.தி.மு.க.வை இரண்டாக உடைத்து பா.ஜ.க. காலூன்ற முயற்சி; நக்மா குற்றச்சாட்டு

தமிழகத்தில் அ.தி.மு.க.வை இரண்டாக உடைத்து பா.ஜ.க. காலூன்ற முயற்சி செய்வதாக நக்மா குற்றம் சாட்டினார்.

Update: 2017-04-27 21:15 GMT

சென்னை,

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜான்சி ராணி தலைமை தாங்கினார். அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலாளர் ஹசீனா சையத் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா கலந்துகொண்டு பேசினார். முன்னதாக, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

டெல்லியில் பேரணி

உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. அதே அளவு இடஒதுக்கீட்டை சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களிலும் கொடுக்க வலியுறுத்தி ஆகஸ்டு மாதம் 20–ந் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் மகளிர் காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற இருக்கிறது.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் ஓரம் இருந்த மதுக்கடைகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், தமிழகத்தில் அவ்வாறான கடைகளை குடியிருப்பு பகுதிகளில் திறக்க அரசு முயற்சித்து வருகிறது. இதை எதிர்த்து பெண்கள் போராடி வருகிறார்கள். ஆனால், குறுக்கு வழியை கையாண்டு மீண்டும் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு முயற்சிக்கிறது.

பா.ஜ.க. முயற்சி

கேரள அமைச்சர் மணி தமிழக பெண்களை இழிவாக பேசியுள்ளார். அதை கண்டித்து கேரள மகளிர் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் முறையாக விசாரணை நடத்தி, அவர் தவறு செய்திருந்தால் தண்டிக்க வேண்டும்.

தமிழகத்தில் பா.ஜ.க. ஒரு சதவீதம் கூட கிடையாது. ஆனால், அ.தி.மு.க.வை இரண்டாக உடைத்து காலூன்ற பா.ஜ.க. முயற்சி செய்கிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. ஆனால், டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகளை சந்திக்கக்கூட பிரதமர் நரேந்திரமோடி தயாராக இல்லை. சுதந்திரமாக அவர்களின் கோரிக்கையை கேட்டு நிறைவேற்ற வேண்டும்.  இவ்வாறு நக்மா கூறினார்.

மேலும் செய்திகள்