கார் பள்ளத்தில் கவிழ்ந்தது வனரோஜா எம்.பி. காயமின்றி தப்பினார்

செங்கம் அருகே வனரோஜா எம்.பி. சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் அவர் காயமின்றி தப்பினார்.

Update: 2017-05-26 21:45 GMT
செங்கம்,

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் வனரோஜா. அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் செங்கம் அருகே உள்ள நீப்பத்துறை கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் கட்சியில் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து வனரோஜா எம்.பி. முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். இதையடுத்து அவர் தனது ஆதரவு எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை அழைத்து சென்னையில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

கார் பள்ளத்தில் கவிழ்ந்தது

இதில் கலந்துகொண்ட வனரோஜா எம்.பி. கணவர் சண்முகத்துடன் நேற்று முன்தினம் நள்ளிரவு செங்கத்திற்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தார். காரை செங்கத்தை அடுத்த விண்ணவனூரை சேர்ந்த டிரைவர் திருமலை (வயது 41) ஓட்டினார். காரின் பின் இருக்கையில் வனரோஜா எம்.பி. மற்றும் அவரது கணவர் சண்முகம் அமர்ந்திருந்தனர்.

திருவண்ணாமலை-செங்கம் பிரதான சாலையில் நள்ளிரவில் கார் சென்று கொண்டிருந்தது. செங்கம் அருகே எறையூர் பகுதியில் சென்றபோது எதிரே வேகமாக மினிவேன் ஒன்று வந்தது. அதன் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் லேசாக திருப்பினார். ஆனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

காயமின்றி தப்பினார்

இந்த விபத்தில் வனரோஜா எம்.பி. காயமின்றி தப்பினார். எனினும் அவரது கணவர் சண்முகம் மற்றும் டிரைவர் திருமலை ஆகியோர் லேசான காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரையும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினர். கார் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்