ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் நகை–பணம் கொள்ளை; மயக்க மருந்து கொடுத்து கைவரிசை

ஈரோடு மாவட்டம் சம்பத் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 59). ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவர், உறவினரை பார்க்க ஈரோட்டில் இருந்து குடும்பத்தோடு நேற்று ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை வந்தார்.

Update: 2017-05-28 16:18 GMT

சென்னை,

செல்வம் பொது பெட்டியிலும், அவருடைய மனைவி மற்றும் உறவுக்கார பெண்கள் மகளிர் பெட்டியிலும் பயணம் செய்தனர். ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 4.30 மணி அளவில் சென்னை சென்டிரல் வந்தடைந்தது.

பயணிகள் ஒவ்வொருவராக இறங்கி சென்றனர். ஆனால் செல்வம் பொதுப்பெட்டியில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் என சுமார் ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சென்னை சென்டிரல் ரெயில்வே போலீசார் செல்வத்தை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செல்வத்துக்கு, மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு மற்றும் சேலம் ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்