மாநகராட்சி கமிஷனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஐகோர்ட்டு எச்சரிக்கை

விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யாத மாநகராட்சி கமிஷனர், போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனர் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை செய்துள்ளது.

Update: 2017-06-13 21:45 GMT
சென்னை,

சென்னை பாரிமுனை, என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை என்று அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு தொடர்பாக டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பெருநகர சென்னை மாநகராட்சியின் 5-வது மண்டல அதிகாரி 2 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை தாக்கல் செய்தார்.

நீதிபதி குழு பரிந்துரை

அதில், ‘ஐகோர்ட்டு உத்தரவின்படி அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ராமமூர்த்தி தலைமையிலான குழு செய்த பரிந்துரையின் அடிப்படையில், 1,252 நடைபாதை வியாபாரிகளுக்கு, என்.எஸ்.சி. போஸ் சாலை, ஈவினிங் பஜார், ராஜா அண்ணாமலை மன்றம் உள்பட 8 பகுதிகளில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட இடத்திலும் விதிமுறைகளை மீறி பந்தல் அமைத்த வியாபாரிகளுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. அவர்களும் அந்த பந்தலை அகற்றிவிட்டனர். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் சட்டப்படியான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுத்து வருகின்றனர்’ என்று கூறப்பட்டிருந்தது.

கடுமையான நடவடிக்கை

பதில் மனுவை படித்து பார்த்த நீதிபதிகள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ‘இதுபோன்ற பதில் மனுக்களை ஏற்க முடியாது. நீதிபதி ராமமூர்த்தி குழு பரிந்துரையின் அடிப்படையில் வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டிருந்தால், அந்த குழுவின் பரிந்துரை அறிக்கை எங்கே? அதை ஏன் தாக்கல் செய்யவில்லை? வியாபாரிகளுக்கு எந்த விதிமுறைகளை பின்பற்றி கடைகள் ஒதுக்கப்பட்டன? ஐகோர்ட்டு உத்தரவை சரி வர பின்பற்றாமல், பெயரளவில் இதுபோல பதில் மனு தாக்கல் செய்தால், கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கையை அதிகாரிகள் மீது எடுக்க வேண்டியது வரும்’ என்று எச்சரிக்கை செய்தனர்.

விரிவான பதில்

மேலும், பதில் மனுவில் திருப்தி இல்லை. எனவே மாநகராட்சி கமிஷனரை நேரில் வரச்சொல்லுங்கள். இந்த விவகாரத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனரும், போக்குவரத்து போலீஸ் பிரிவு இணை கமிஷனரும் தான் பொறுப்பானவர்கள். இவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எங்களுக்கு எந்த தயக்கமும் கிடையாது. இந்த இரு அதிகாரிகளும் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்