நெருக்கடி நிலை பிரகடனம்தான் என்னை அரசியலுக்குள் நுழைய வைத்தது

இந்திரா காந்தியால் பிறப்பிக்கப்பட்ட நெருக்கடி நிலை பிரகடனம், இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு கருப்பு புள்ளி.

Update: 2017-06-24 22:15 GMT

சென்னை,

என்னை அரசியலுக்குள் அதுதான் நுழைய வைத்தது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1975–ம் ஆண்டு ஜூன் 25–ந் தேதி இந்திராகாந்தியால் பிறப்பிக்கப்பட்ட நெருக்கடி நிலை பிரகடனம் எவ்வாறு அடிப்படை உரிமைகளை எல்லாம் பறித்தன. ஜனநாயக முறைகளுக்கு மாறாக எவ்வாறு பிறப்பிக்கப்பட்டது என்பதையெல்லாம் விளக்கிவிட்டு அவர் மேலும் கூறியதாவது:–

நெருக்கடி நிலை பிரகடனம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றி அமைத்து, என்னை முழுமையான அரசியல்வாதியாக மாற்றியது என்பதை நினைவுகூற விரும்புகிறேன். 1974–75–ம் ஆண்டுகளில் நான் மாணவனாக இருந்தேன். அப்போது அகில பாரதிய வித்யார்த்தி பரி‌ஷத் அமைப்பில் தீவிரமாக இருந்தேன். ஊழலுக்கு எதிராக ஜெயபிரகாஷ் நாராயணன் ஒரு சமூக பொருளாதார ஜனநாயக புரட்சிக்கு அழைப்பு விடுத்த நேரத்தில், நான் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்ற அவரை அழைத்தேன். இதுதான், அதன்பின்பு 17½ மாதங்கள் என்னை சிறையில் அடைப்பதற்கான ஒரு காரணமாக கூறப்பட்டது.

நாங்கள் சங்கராந்தி போன்ற பல பண்டிகைகளை அரிசலு போன்ற உணவு பொருட்களை தயாரித்து கொண்டாடுவோம். ஜெயிலில்தான் நான் சமையலை கற்றுக்கொண்டேன். அரசியலுக்கு சம்பந்தமில்லாதவர்கள் கைது செய்யப்பட்ட நேரத்தில், அவர்கள் கவலையால் சோர்ந்துவிடுவார்கள். அப்படிப்பட்டவர்களுடன், நான் பேசி அவர்களை உற்சாகப்படுத்தி, இந்த ஏதேச்சிகார ஆட்சியைக் எதிர்த்து போராடவேண்டிய நேரத்தில், உணர்வு பூர்வமாகவும், உடல்ரீதியாகவும் வலுவாக இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்கூறுவேன்.

இத்தகைய சர்வாதிகார நிலைமைகளை எதிர்த்து போராடவேண்டும் என்ற எனது உறுதிப்பாடு என்னை வலுப்படுத்தியது. சட்டத்தொழிலில் ஈடுபடுவதற்காக பதிலாக, அரசியலில் நுழைய தீர்மானித்தேன்.

எனது ஜெயில்வாசம் ஏதேச்சதிகாரத்தையும், சர்வாதிகாரத்தையும் எதிர்த்துப்போராட எனக்கு இருந்த உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தியது. நெருக்கடி நிலை பிரகடனம்தான் இந்த நாட்டின் ஜனநாயக வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாகும். இந்த நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாத்து பராமரிக்கும் ஒரு விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை நாட்டில் உள்ள ஒவ்வொரு இளைஞனும் தெரிந்துகொள்ள வைக்கவேண்டும்.  மேற்கண்டவாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்