நடிகர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடிகர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் கூறினார்.

Update: 2017-07-16 22:00 GMT
விழுப்புரம்,

விழுப்புரத்தில், மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அடுத்த மாதம் 9-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார்.

இதற்காக விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகே மேடை அமைக்கும் பணியையொட்டி நேற்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டார்.

பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தொடர்புகொண்டு தான் ஆட்சி நடத்துகிறார் என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டுகிறாரே?

பதில்:- ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க. கட்சியோடு ரகசிய உறவு வைத்து கொண்டு அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க முயன்றார். அதற்காகத்தான் கட்சி தலைமை மூலம் முதல்-அமைச்சர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இன்னும் அவர் தி.மு.க.வுடன் தொடர்பு வைத்திருப்பது, அவர் நடத்தும் நாடகங்களை பார்த்து கொண்டு இருக்கும் மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி பேச ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகுதி கிடையாது.

கேள்வி:- நிதி அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கடி தினகரனை எங்கள் அணியில் சேர்க்க மாட்டோம் என்று கூறிவருகிறாரே?

பதில்:- நாங்கள் எங்கள் அணியில் உள்ளவர்களின் ஒட்டுமொத்த கருத்துகளின் அடிப்படையில் தான் முடிவு செய்வோம்.

மேற்கண்டவாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது:-

சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் கமல்ஹாசன், தமிழ் கலாசாரத்துக்கும், இந்திய கலாசாரத்துக்கும் விரோதமாக செயல்படுகிறார். பெண்களை பற்றி பேசவும், இந்த நாட்டு மக்களை பற்றி பேசவும் அவருக்கு தகுதி கிடையாது. பணத்திற்காகவும், தனது ஆதாயத்துக்காகவும் பிக் பாஸ் என்கிற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதில் தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மக்களை விமர்சிக்கிற வகையிலும், தரம் தாழ்த்துகிற வகையிலும் பெண்களை இழிவாக காட்டுகிறார். இந்த செயலை புரியும் நடிகர் கமல்ஹாசன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

கடம்பூர் ராஜூ

தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் கமல்ஹாசன் தமிழ்நாட்டில் அரசு துறைகள் அனைத்தும் கெட்டு போய்விட்டது என்று கூறி உள்ளார். தொடர்ந்து அவதூறு தெரிவித்தால், அரசு சார்பில் அவர் மீது வழக்கு தொடரப்படும். தமிழக அரசு திரைப்பட நடிகர் மற்றும் சின்னத்திரை நடிகர்களுக்காக விருது வழங்கி கவுரவித்து உள்ளது. திரைப்படத்துறையினர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர். ஆனால் கமல்ஹாசன் பாராட்டக்கூட மனம் இல்லாதவர். அவரைப்பற்றி கூற விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்