எழும்பூரில், அதே இடத்தில் சி.பா.ஆதித்தனார் சிலையை 20-ந் தேதிக்குள் நிறுவ முதல்-அமைச்சர் உத்தரவு

சி.பா.ஆதித்தனார் சிலையை சென்னை எழும்பூரில் அதே இடத்தில் 20-ந் தேதிக்குள் அமைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2017-09-14 22:30 GMT
சென்னை

தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘தினத்தந்தி’ நாளிதழை துவக்கி பத்திரிகை உலக ஜாம்பவானாக திகழ்ந்தவர் சி.பா.ஆதித்தனார். பத்திரிகைகள் படிப்பது, செய்தித் தாள்களை வாசிப்பது என்பதெல்லாம் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே உரித்தானது என்றிருந்த நிலையை மாற்றி, பாமர மக்களும் எளிதில் அறிந்திடும் வகையில், எளிய தமிழ் நடையில் செய்திகளை வெளியிட்டு, சமுதாயத்தின் அடித்தட்டு மக்களையும், பத்திரிகையை படிக்க வைத்தார்கள். இதன் மூலம் தமிழர்களின் தன்மான உணர்விற்கு உரமூட்டி தமிழுக்கு அன்னார் செய்த தொண்டு அளப்பரியது.

தமிழக சட்டப்பேரவைத் தலைவராக பதவி வகித்து அந்தப் பதவிக்கு கம்பீரம் சேர்த்தவர், ஆதித்தனார். தமிழக அரசியலில் அறிஞர் அண்ணாவுக்கு பக்கபலமாக இருந்து, பின்னாளில் எம்.ஜி.ஆரின் அன்புக்கு பாத்திரமாகத் திகழ்ந்தவர். எனவே தான் அவருடைய திருவுருவ சிலையை சென்னை எழும்பூரில் அமைத்து அச்சிலை அமைந்துள்ள சாலைக்கு “ஆதித்தனார் சாலை” என்று பெயர் சூட்டி பெரிதும் மகிழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ள ஆதித்தனார் வாழ்ந்த இல்லத்தை கடந்த 2005-ம் ஆண்டு அரசுடைமையாக்கி, அதனை நினைவுச் சின்னமாகவும் மாற்றி, அன்னாரின் நினைவைப் போற்றியதை உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் இதயங்கள் அறியும்.

எழும்பூரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு அப்பகுதியை சீரமைத்து, ஆதித்தனார் சிலை அமைந்துள்ள பீடத்தை சுற்றியுள்ள போக்குவரத்துத் தீவை அழகுபடுத்தி, எழிலார்ந்த பகுதியாக மாற்றியமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து, 29-12-2015 அன்று மாமன்றம் ஒப்புதல் வழங்கியது.

இப்பணிக்காக ஒரு விரிவான வரைபடம் தயாரிக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு 16-6-2017 அன்று ஒப்பந்ததாரர் இறுதி செய்யப்பட்டார். ஆதித்தனார் சிலையை ‘தினத்தந்தி’ நிறுவனமே இதுவரை பராமரித்து வந்ததனால், இப்பணிகள் நிறைவடையும் வரை, சிலையை பாதுகாப்பாக வைப்பதற்கு 4-5-2017 அன்று ‘தினத்தந்தி’ பத்திரிகை நிறுவனத்தினரிடம் பெருநகர சென்னை மாநகராட்சியால் கேட்டுக்கொள்ளப்பட்டது.

26-5-2017 அன்று சிலை முறையாக அகற்றப்பட்டு ‘தினத்தந்தி’ பத்திரிகை நிறுவனத்தினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் போக்குவரத்து தீவைப் மேம்படுத்தும் பணி 13-9-2017 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியால் துவக்கப்பட்டது.

இதனிடையே வரும் 27-9-2017 அன்று சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ஆதித்தனார் சிலையை அதே இடத்தில் மீண்டும் நிறுவ பெருநகர சென்னை மாநகராட்சி கான்கிரீட் அடித்தளமும், பீடமும் அமைத்து வருகிறது.

அன்னாரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஏதுவாக, இப்பணிகள் 20-9-2017-க்குள் விரைந்து முடிக்க பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பின்னர், சிலை அமைந்துள்ள பீடத்தை சுற்றியுள்ள பகுதியினை மேலும் அழகுபடுத்தி போக்குவரத்து தீவு அமைக்கும் பணிகள் அனைத்தும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்