வடக்கன் என்ற மனநிலை மிகவும் ஆபத்தான போக்காகும்: பா.ரஞ்சித் பதிவு

நம் இடத்திற்குப் பிழைக்க வந்தவர்களை, நம் வாய்ப்புகளைப் பறித்துக்கொண்டவர்களாகக் கருதும் மோசமான மனநிலை உலகம் முழுவதுமே இருக்கிறது.;

Update:2025-12-30 21:55 IST

சென்னை,

திருவள்ளுர் மாவட்டம், திருத்தணியில் நடந்த மனிதமற்ற கொடூர செயலை கண்டு நெஞ்சம் பதறுகிறது. அண்மைக்காலமாகத் தமிழகத்தில் அதிகரித்துவரக்கூடிய போதைப் பொருள் கலாச்சாரத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சியாளர்களுடைய மெத்தனப் போக்கே இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணம். இத்தகைய குற்றச் செயல்கள் பள்ளி,கல்லூரிகளிலும் தலைவிரித்து ஆடுவதை அலட்சியமாகப் பார்த்ததன் விளைவுதான் இன்றைக்குப் பொதுவெளியில் எந்தவோர் அச்சமுமின்றி வெளிப்படும் கும்பல் மனநிலைக்குக் காரணம்.

இந்நிலைக்கு நாமும் பொறுப்பேற்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படக்கூடிய தருணமிது.சுதந்திரம்,சமத்துவம், சகோதரத்துவம் என்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினுடைய அடிநாதம்.அதை எவ்வகையிலும் நாம் சிதைத்துவிடக் கூடாது.நமக்குள் இருக்கிற வேறுபாடுகளைக் களைந்தெரிந்து, சகோதரத்துவத்தைப் பேண வேண்டும்.அதைவிடுத்து வடக்கன் என்கிற வெறுப்பு மனநிலையில் செயல்படுவது சமூக சீர்குலைவிற்கே வழிவகுக்கும்.

இந்த வடக்கன் என்ற மனநிலை மிகவும் ஆபத்தான போக்காகும். 'நகைச்சுவை' பதிவுகள் தொடங்கி கடுமையான சொல்லாடல்கள் வரை சமூக வலைதளங்களிலும் நம் அன்றாடப் பேச்சுகளிலும் இந்த மனநிலை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. நம் இடத்திற்குப் பிழைக்க வந்தவர்களை, நம் வாய்ப்புகளைப் பறித்துக்கொண்டவர்களாகக் கருதும் மோசமான மனநிலை உலகம் முழுவதுமே இருக்கிறது. இதைக் களைவதற்கான ஒரே வழி, மக்களுக்கிடையேயான சகோதரத்துவத்தை வளர்த்தெடுப்பதுதான்.இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள தனிநபர் சுதந்திரத்தையும் உரிமையையும் சக மனிதர்கள் ஏற்க வேண்டும், அதுவே அறமும் கூட.

மேலும், பொதுவெளியில் கும்பலாகச் சேர்ந்துகொண்டு ஓர் அப்பாவி இளைஞனைக் கொடூரமான ஆயுதங்களால் தாக்குவதை வீடியோ எடுத்து அதைத் தற்பெருமையாகக் கருதி, சமூக வலைதளத்தில் பகிர்வோர்களைக் காவல்துறை இனங்கண்டு கைது செய்து அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தர வேண்டும்.

மேலும், சமூக வலைதள மோகத்தில் சிறார்களும் இளைஞர்களும் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் விதத்திலும்,

வன்முறை தூண்டும் வகையிலும் கும்பலாகச் சேர்ந்துகொண்டு ரீல்ஸ் பதிவிடுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை ஆட்சியாளர்களும் காவல்துறையினரும் தாமதிக்காமல் முன்னெடுக்க வேண்டும்.

போதை, ஆயுதக் கலாச்சாரம், சமூகப் பிரிவினை எனத் தனித்தனி காரணிகளைக் கொண்டு இப்பிரச்சினைகளை அணுகக் கூடாது. இவை எல்லாமே ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழ எந்தவகையிலும் நாம் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசை வலியுறுத்துகின்றோம்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்