ரிப்பன் மாளிகை அருகே மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது
தூய்மை பணியாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரிப்பன் மாளிகை அருகே போலீசார் குவிக்கப்பட்டனர்.;
சென்னை,
தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் கோரியும் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் இதுவரை சுமூகமான தீர்வு எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்த சூழலில் இன்று காலையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். ஒரு தரப்பினர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு தரப்பினர் சென்னை அண்ணா அறிவாலயம் முன்பு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
அண்ணா அறிவாலயத்தைத் தொடர்ந்து, சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் கோரியும் பதாகைகளை ஏந்தி, முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகை அருகே இரவில் தூய்மை பணியாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரிப்பன் மாளிகை அருகே போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை பேருந்துகளில் ஏறக் கூறியபோது, அவர்கள் மறுத்ததால் போலீசார் அவர்களை குண்டுகட்டாக கைது செய்தனர்.