தோட்டக்கலைத்துறையை நீர்த்துப்போகச் செய்யும் திமுக அரசு - நயினார் நாகேந்திரன்
திமுக அரசு தோட்டக்கலை அலுவலர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ளதாக நயினார் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தோட்டக்கலைத்துறையை நீர்த்துப்போகச் செய்வதோடு, சிறு குறு விவசாயிகளுக்குச் சரியான நிபுணத்துவ சேவையும் கிடைக்க முடியாத வகையில், உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டத்தைக் கொண்டுவர திமுக அரசு முயற்சிப்பது கண்டனத்திற்குரியது.
பல்வேறு குளறுபடிகள் மூலம் தோட்டக்கலைத்துறையில் ரூ.141 கோடி ஊழல் செய்து சுரண்டித் தின்ற திமுக அரசு, தற்போது ஒரு படி மேலே சென்று தோட்டக்கலைத்துறையின் தனித்துவத்தை அழித்து, வேளாண்துறையின் ஒரு அங்கமாக மாற்றத் திட்டமிட்டு, ஒட்டுமொத்தமாகத் தோட்டக்கலைத்துறையை உருக்குலைக்க முடிவு செய்துள்ளது. மேலும், தோட்டக்கலை அலுவலர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ளது.
தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், செவிலியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் என அனுதினமும் அரசு ஊழியர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளி அரசு இயந்திரத்தின் செயல்பாட்டைச் சீரழிப்பது தான் "நாடு போற்றும் நல்லாட்சியின்" அங்கமா? ஆட்சி அதிகாரத் திமிரில் அரசு ஊழியர்களை அலட்சியம் செய்யும் திமுக தனது அகம்பாவத்தாலேயே வீழ்ச்சியடையும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.