மது அருந்த பணம் தராததால் ஆத்திரம்... தோசைக் கரண்டியால் மனைவியை அடித்துக்கொன்ற தொழிலாளி
பணம் தராததால் ஆத்திரமடைந்த பரதன், வீட்டில் இருந்த தோசைக் கரண்டியால் மனைவியின் தலையில் தாக்கியுள்ளார்.;
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பரதன் (31 வயது). இவருக்கும், சுந்தரி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பரதனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் சம்பவத்தன்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஏற்கனவே குடித்துவிட்டு போதையில் வந்த பரதன், மேலும் மது அருந்த மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தராததால் ஆத்திரமடைந்த பரதன், வீட்டில் இருந்த தோசைக் கரண்டியால் சுந்தரியின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வலியால் துடித்த சுந்தரியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம், பக்கத்தினர் காயமடைந்த சுந்தரியை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சுந்தரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.