சசிகலாவை 20-ந் தேதி டி.டி.வி.தினகரன் சந்திக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. பேட்டி

சிறையில் உள்ள சசிகலாவை வருகிற 20-ந் தேதி டி.டி.வி.தினகரன் சந்தித்து பேச இருப்பதாகவும், அப்போது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் அவருடன் சசிகலாவை சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

Update: 2017-09-16 22:01 GMT
குடகு, 

தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்தனர். இதில் ஜக்கையன் எம்.எல்.ஏ. அந்த அணியில் இருந்து பிரிந்து எடப்பாடி பழனிசாமி அணியில் சேர்ந்துவிட்டார்.

மீதமுள்ள 18 எம்.எல்.ஏ.க்களை டி.டி.வி.தினகரன் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் குஷால் நகரில் உள்ள ‘பெண்டிங் பான்’ எனும் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளார்.

இன்று வருகிறார்

இந்த நிலையில் நேற்று காலை தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தங்கும் விடுதியில் இருந்து வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி கவர்னரிடம் மனு கொடுத்தோம். ஆனால் அவர் இதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் எங்களிடம் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்ய டி.டி.வி.தினகரன் இன்று (அதாவது நேற்று) வருவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் டி.டி.வி.தினகரனால் வர முடியவில்லை. அவர் நாளை (இன்று) இங்கே வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி பதவி, அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு எங்களை மிரட்டுகிறார். இது முதல்-அமைச்சர் பதவிக்கு பெரிய இழுக்கு ஆகும். எனவே அவர் பதவி விலக வேண்டும். கவர்னரிடம் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் நாங்கள் ஜனாதிபதியை சந்திக்க முடிவு செய்துள்ளோம். ஜனாதிபதி அலுவலக பணிகள் அதிகமாக உள்ளது. இதனால் ஜனாதிபதியை சந்திக்க காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. விரைவில் ஜனாதிபதியை சந்தித்து பேசுவோம்.

கட்சி தான் முக்கியம்

எங்களுக்கு பதவி மீது ஆசை இல்லை. பதவி இன்று கிடைக்கும். நாளை கிடைக்காமலும் போகும். கட்சி தான் எங்களுக்கு முக்கியம். கட்சியை காப்பாற்றவே நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.

நாமக்கல் மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி எம்.எல்.ஏ. பழனியப்பன் தங்கும் விடுதியில் இல்லை. அவர் தமிழகத்துக்கு சென்றுவிட்டார். காண்டிராக்டர் ராம.சுப்பிரமணியன் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் அவர் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். முன்ஜாமீன் கிடைத்ததும் அவர் இங்கே வருவார்.

20-ந் தேதி சசிகலாவுடன் சந்திப்பு

வருகிற 20-ந் தேதி டி.டி.வி.தினகரன், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசுகிறார். அப்போது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்