பள்ளிகள் இன்று திறக்கப்படும் நிலையில்.. மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் அறிவித்த இடைநிலை ஆசிரியர்கள்

தேர்தல் வாக்குறுதி 311 -ஐ நிறைவேற்றக்கோரிய அட்டைகளை ஏந்தியவாறும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2026-01-05 03:51 IST

கோப்புப்படம்

சென்னை,

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் சென்னையில் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். சாலை மறியல், கண்களில் கருப்பு துணி கட்டியவாறும் பல்வேறு வகைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் அருகே உள்ள சிவானந்தா சாலையில் நேற்று, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 10-வது நாளாக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கழுத்தில் அணிந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

மேலும், தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி 311 -ஐ நிறைவேற்றக்கோரிய அட்டைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் கயிறுகளை தடுப்புகளாக ஏற்படுத்தி அவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் போராட்டத்தில் ஈடுபடும் வகையில் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து, மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். பின்னர், மாலை அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக போராட்டத்தின் போது இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஊதிய முரண்பாடு 2009-ம் ஆண்டுக்கு பின்பு நியமிக்கப்பட்ட 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும். யாருடைய தூண்டுதலாலும் போராட்டம் நடைபெறவில்லை. எங்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென தான் கேட்கிறோம். போராட்டம் முடிவுக்கு வரக்கூடாது என நினைக்கிறார்களா என தெரியவில்லை.

எனவே, முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் இதில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊதிய முரண்பாட்டை களையவில்லை என்றால் எங்களின் போராட்டம் தொடரும். எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய முரண்பாடுகளை களைந்தால் மட்டுமே பள்ளிக்கு செல்வோம். இல்லையென்றால் எங்களின் போராட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும். மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை 10 நாட்கள் வரை போராட வைத்திருப்பது மிகவும் வேதனைக்குறியது. ஆசிரியர்களின் போராட்டத்தை முடித்து வைப்பது அரசின் கையில் தான் உள்ளது. அதுவரை போராட்டம் தொடரும். இன்று முதல் தீவிர போராட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்