அனைத்து கட்சிகளும் சமம் என்ற வகையில்.. தேர்தல் பிரசாரத்துக்கு வழிகாட்டு நெறிமுறைகள்..!
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்துக்கு பிறகு தமிழக அரசு 47 பக்க நகல் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தது.;
தமிழ்நாட்டில் அடுத்த சிலமாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான ஆயத்தத்தில் அனைத்து கட்சிகளுமே களத்தில் இறங்கிவிட்டன. தமிழ்நாட்டில் எப்போதுமே தலைவர்களின் பிரசாரங்கள்தான் வாக்குகளை அள்ளும் யுக்தியாக கருதப்படுகிறது. இப்போதெல்லாம் கூட்டங்களைவிட சாலை பேரணி என்று சொல்லப்படும் ‘ரோடுஷோ’வில் தலைவர்கள் அதிகம் அக்கறை காட்டுகிறார்கள்.
யாருடைய ரோடுஷோவில் நீண்டநெடுந்தூரம் மக்கள் இருபுறமும் காத்து நிற்கிறார்கள் என்பதில்தான் தலைவர்களின் செல்வாக்கே மதிப்பிடப்படுகிறது. அதாவது மைதானத்தில் மேடைபோட்டு அங்கு காத்து இருக்கும் மக்கள் வெள்ளத்திடையே தலைவர்கள் பேசுவது எல்லாம் போயேவிட்டது. இப்போது இதற்கென்று விசேஷமாக வடிவமைக்கப்பட்ட பஸ்சில் நின்று தலைவர்கள் பேசும் வழக்கம் நடைமுறைக்கு வந்துவிட்டது.
இந்த புதிய நடைமுறையில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் நெரிசல் ஏற்பட்டுவிடுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் பஸ்சின் மீது ஏறி நின்று பேசிய அவரை பார்க்கவேண்டும், அவருடைய பேச்சைக் கேட்கவேண்டும் என்ற வேகத்தில் ஏராளமான மக்கள் பல மணி நேரம் காத்திருந்தனர்.
தொடர்ந்து அவர் வந்து பேசத்தொடங்கியவுடன் பஸ்சை நோக்கி பலத்த தள்ளுமுள்ளுக்கிடையே பலரும் வந்ததால் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் இதற்கு முன்பு எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் ரோடுஷோ நடத்தியதில்லை. அவர்கள் ஏராளமான பொதுக்கூட்டங்களில் உரையாற்றியுள்ளனர். அங்கும் பெருங்கூட்டங்கள் கூடின. ஆனால் அதில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடந்த வரலாறுகள் இல்லை. கரூர் கூட்டநெரிசல் சம்பவத்துக்கு பிறகு தமிழக அரசு 47 பக்க நகல் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தது.
அதில் 5 ஆயிரம் பேருக்கு குறையாமல் மக்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், சாலை பேரணிகள் என்ற ரோடுஷோக்கள், ஆர்ப்பாட்டங்கள், கண்டன பேரணிகள், கலாசார மதரீதியான நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு போலீசார் அனுமதிகொடுக்கும்போது விதிக்கும் நிபந்தனைகளை மீறினால் என்ன தண்டனைகள் விதிக்கப்படும்? என்று பட்டியலிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், ‘இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பின்பற்ற வேண்டிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தங்கள் கருத்துகளை தெரிவிக்க பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துகளை அனுப்பியவுடன் அதையெல்லாம் பரிசீலித்து இறுதிவழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். தமிழக அரசு கூறியுள்ளபடி, இன்றுக்குள் இறுதி வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் முடிவுசெய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
இந்த மாதத்தில் இருந்து அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடப்போகும் நேரத்தில், இதுபோன்ற பொதுவான வழிமுறைகள் வகுப்பது ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்ற சர்ச்சைகள் வருவதை தடுக்கும். இப்போது விஜய் பேசும் கூட்டங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு நிபந்தனைகள் என்று கூறப்படும் விமர்சனங்களை, அனைவருக்கும் பொதுவான வழிகாட்டு நெறிமுறைகள் வந்தபிறகு முன்வைக்கமுடியாது.
ஆனால் பொதுவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டவுடன் எந்தவித பாரபட்சமும் இல்லாமல், அனைத்து கட்சிகளும் சமம் என்ற வகையில், போலீசார் எடுக்கப்போகும் நடவடிக்கையில்தான் எதிர்காலத்தில் கரூர் போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடக்காமல் இருப்பதற்கு வழிவகுக்கும்.